This Article is From Apr 09, 2019

பூஜ்யத்துக்குள் ராஜ்ஜியம் நடத்துகிறார் மு.க.ஸ்டாலின்: பொன்னார் பதிலடி

பூஜ்யத்தை விட்டு வெளியே வந்து பார்த்தால்தான் பாஜக சதம் அடித்தது தெரியும் என மு.க.ஸ்டாலின் கருத்துக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பதிலடி கொடுத்துள்ளார்.

பூஜ்யத்துக்குள் ராஜ்ஜியம் நடத்துகிறார் மு.க.ஸ்டாலின்: பொன்னார் பதிலடி

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமாரை ஆதரித்து நேற்று நாகர்கோவிலில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாஜகவின் தேர்தல் அறிக்கையை கடுமையாக விமர்சித்தார். பாஜகவின் இந்த தேர்தல் அறிக்கை பூஜ்யம் என்றும், காங்கிரசின் தேர்தல் அறிக்கையே சூப்பர் ஹீரோ என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

கடந்த முறை மோடி மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் வானத்தை கிழிப்பேன் வைகுண்டத்தை காட்டுவேன் மணலை கயிறாக திரிப்பேன் என்ற அளவுக்கு வாக்குறுதிகளை வழங்கினார். கன்னியாகுமரியை உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமாக மாற்றுவேன் என்றார், மாறியதா? வாயில் வடை சுடுவதில் மோடி கில்லாடி. அந்த மாதிரி அறிவிப்புகளையும் உறுதிமொழிகளையும் வாரி வழங்கினார். 

மோடியின் சிஷ்யனாக, வாயில் வடை சுடும் மோடியின் வேட்பாளராக கன்னியாகுமரியில் வசந்தகுமாரை எதிர்த்து நிற்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன். இவர் கடந்த தேர்தலிலும் எண்ணற்ற வாக்குறுதிகளை வாரி வழங்கினார். என்ன சொன்னார், என்ன செய்தார் என்று பட்டியல் எடுத்தேன் 63 உறுதிமொழி கொடுத்துள்ளார். அவர் வாயில் வடை சுட்டார். இவர் அடையே சுட்டுள்ளார். அது வடை, இது அடை என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, இன்று நாகர்கோவில் அருகே செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன் மு.க.ஸ்டாலினின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்தார். பாஜக தேர்தல் அறிக்கை பூஜ்யம் அல்ல. பூஜ்யத்துக்குள் ராஜ்ஜியம் நடத்துகிறார் மு.க.ஸ்டாலின். அந்த பூஜ்யத்தை விட்டு வெளியே வந்து பார்த்தால்தான் பாஜக சதம் அடித்திருப்பது தெரியும் என்றார். 

மேலும், வடை சுடுவதையும் அடை சுடுவதையும் வைத்து தேர்தலை சந்திக்க முடியாது எனக் கூறிய மத்திய அமைச்சர், திமுக ஆட்சியில் இருந்தபோது கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை எனக் குற்றஞ்சாட்டினார்.

.