மிசோரமில் காங்கிரஸை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்தது ‘மிசோ தேசிய முன்னணி’!

‘மிசோ தேசிய முன்னணி’ காங்கிரஸை தோற்கடித்து ஆட்சி அரியணையில் அமர உள்ளது

சோரம்தங்கா, மிசோரமை, 1998 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார்

Aizawl:

5 மாநில சட்டமன்றத் தேர்தலில், 3 முக்கிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருந்தாலும், தான் ஆட்சி செய்து வந்த மிசோரமில் படுதோல்வியை சந்தித்தது. அம்மாநில பிராந்தியக் கட்சியான ‘மிசோ தேசிய முன்னணி' காங்கிரஸை தோற்கடித்து ஆட்சி அரியணையில் அமர உள்ளது.

மிசோ தேசிய முன்னணியின் தலைவரும், இரண்டு முறை முதல்வருமான 84 வயதாகும், சோரம்தங்கா, அம்மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். மிசோரமில் மொத்தம் இருக்கும் 40 தொகுதிகளில் 26-ல் மிசோ தேசிய முன்னணி வெற்றி பெற்றுள்ளது. ஆட்சியிலிருந்த காங்கிரஸ் வெறும் 5 தொகுதியில் தான் ஜெயித்தது. காங்கிரஸ் தலைமையில் முதல்வராக இருந்த லால் தன்னாவ்லா, போட்டியிட்ட இரண்டு தொகுதியிலும் தோற்கடிக்கப்பட்டார்.

10 ஆண்டுகள் கழித்து மிசோ தேசிய முன்னணி மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. இதனால், அந்தக் கட்சியினருக்கு கிறிஸ்துமஸ் முன்னரே வந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

வெற்றி குறித்து சோரம்தங்கா NDTV-யிடம் கூறுகையில், ‘நான் மிசோ முன்னணிக்கு 29 இடங்களுக்கு அதிகமாகவும், காங்கிரஸுக்கு 10 இடங்குக்குக் குறைவாகவும் கிடைக்கும் என்று கணித்திருந்தேன். எனது கணிப்பு சரியாக வந்துள்ளது. மக்கள், காங்கிரஸ் ஆட்சிக்கு எதிரான மன நிலைக்கு வந்துவிட்டனர். அவர்கள் மதுபான விஷயத்தை நிர்வகித்த விதமும் மக்களையும், சர்ச் அமைப்புகளையும் எரிச்சலடையச் செய்தன. மிசோரம் ஒரு கிறித்துவ மாநிலம். எனவே, இங்கு பாஜக-வுக்கு இடமில்லை' என்று கூறினார்.

சோரம்தங்கா, மிசோரமை, 1998 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார். கருத்துக் கணிப்புகள், மிசோரமில் தொங்கு சட்டமன்றம் அமையும் என்று கூறின. ஆனால், அது பொய்த்துவிட்டது.

காங்கிரஸின் தோல்வி குறித்து முதல்வராக இருந்த லால் தன்னாவ்லா, ‘எனக்கு எது தவறாக சென்றது என்று தெரியவில்லை. ஆனால், தேர்தல் முடிவுகள் எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளன' என்றார். காங்கிரஸ் ஆட்சி செய்த கடைசி வட கிழக்கு மாநிலம் மிசோரம் என்பது குறிப்பிடத்தக்கது.

சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட ‘சோரம் மக்கள் இயக்கம்' கட்சி, மிசோரம் தேர்தலில் 8 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. வரும் சனிக்கிழமை, சோரம்தங்கா முதல்வராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.