உங்கள் மகளை வரவேற்க இன்னொருவர் மகளை கொன்றுவிட்டீர்கள்: உயர்நீதிமன்றம்

மேலும் இவ்வளவு நாட்கள் ஏன் நீங்கள் தலைமறைவாக இருந்தீர்கள் எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
உங்கள் மகளை வரவேற்க இன்னொருவர் மகளை கொன்றுவிட்டீர்கள்: உயர்நீதிமன்றம்

ஜெய்கோபால் ஜாமின் மனு மீது தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவு.


உங்கள் மகளை வரவேற்க இன்னொருவர் மகளை கொன்றுவிட்டீர்கள் என உயர்நீதிமன்றம் பேனர் வழக்கில் அதிமுக பிரமுகர் ஜெயகோபாலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

முன்னதாக, சென்னை குரோம்பேட்டை பகுதியை சேர்ந்த சுபஸ்ரீ, கடந்த செப்.12ஆம் தேதியன்று, பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியன் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சாலையின் மீடியனில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் ஒன்று சுபஸ்ரீ மீது கவிழ்ந்து விழுந்தது. இதில் நிலைதடுமாறிய அவர் கீழே விழுந்தார். அப்போது, பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். 

தமிழகம் முழுவதும் இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதைத்தொடர்ந்து, பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் எதிலும் பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்கும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்திலும் பேனர்கள், கட் அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என்று அரசியல் கட்சிகள் தங்களது நிர்வாகிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தன. 

தொடர்ந்து, அரசியல் கட்சிகள் மட்டுமின்றி சினிமா நடிகர்களும் தங்களது ரசிகர்களுக்கு பேனர்கள் வைக்க வேண்டாம் என அறிவுறுத்தினர். இதனிடையே, இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்தது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில், சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது ஏன் கிரிமினல் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார். 

மேலும், "உங்களுக்கு எத்தனை லிட்டர் ரத்தம் தேவை? அரசு அதிகாரிகள் ரத்த உறிஞ்சிகளைப் போல இருக்கிறார்கள்.. பொறுப்பற்ற அதிகாரிகளால் உயிரிழப்பு ஏற்படுகின்றன... உயிர்களுக்கு இங்கு எந்த மரியாதையும் இல்லை. பேனர்கள் இருந்தால் மட்டுமே மக்கள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்களா? முதலமைச்சரும், அனைத்து கட்சித் தலைவர்களும் பதாகைகளை அமைப்பதை நிறுத்த அறிக்கைகளை வெளியிட வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். 

இதைத்தொடர்ந்து, அதிமுக நிர்வாகி ஜெய்கோபால் மற்றும் அவரது உறவினர் மேகநாதன் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கில் கடந்த 27ம் தேதி இருவரும் கைது செய்யப்பட்டனர். கடந்த 12 நாட்களாக சிறையில் இருக்கும் இவர்கள் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். 

அந்த மனுவில் தனது மகளின் திருமணத்திற்காக வாழ்த்து கூறி கட்சியினர் பேனர் வைத்ததாகவும், வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் சாலை நடுவே பேனர் வைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எண்ணம் எதுவும் தங்களுக்கு இல்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இந்த சம்பவம் ஒரு துர்திஷ்டவசமான சம்பவம் எனவும், எனவே இந்த வழக்கில் தங்களுக்கு ஜாமின் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, உங்கள் வீட்டு மகளை வரவேற்க இன்னொருவரின் மகளை கொன்றுவிட்டிர்கள் என நீதிபதி கண்டனம் தெரிவித்தார். 

மேலும் இவ்வளவு நாட்கள் ஏன் நீங்கள் தலைமறைவாக இருந்தீர்கள் எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, வழக்கின் விசாரணையை அக்டோபர் 17ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். மேலும் அன்றைய தினம் ஜெய்கோபால் ஜாமின் மனு மீது தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................