உங்களிடம் இருந்து பெறும் வலிமையே, எனது உண்மையான சொத்து: சோனியா உருக்கம்!

உத்தரபிரதேசத்தில் சோனியா காந்தி போட்டியிட்ட ரேபரேலி தொகுதி காங்கிரஸ் வெற்றி பெற்ற ஒரே தொகுதியாகும்.

உங்களிடம் இருந்து பெறும் வலிமையே, எனது உண்மையான சொத்து: சோனியா உருக்கம்!

ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டர்களுக்கும் நான் நன்றி கடன் பட்டிருக்கிறேன் என சோனியா தெரிவித்துள்ளார்.

Raebareli:

மக்களவைத் தேர்தலில் தன்னை மீண்டும் வெற்றி பெற செய்த ரேபரேலி தொகுதி மக்களுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி நேற்று நன்றி தெரிவித்தார். மேலும், நாட்டின் நன்மதிப்பை காப்பாற்ற அனைத்தையும் தியாகம் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். 

2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தம் இருக்கும் 542 தொகுதிகளில் 350 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைக்கிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியோ 90 தொகுதிகளை பெறவே கடும் போட்டியை எதிர்கொண்டு, நீண்ட இழுபறிக்கு பின்னர், அதுவும் குறைந்தபட்ச வாக்குகள் வித்தியாசத்திலே 90 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதேபோல், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுலின் சொந்த தொகுதியான அமேதியிலும் எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஸ்மிர்தி இரானியிடம், ராகுல் கடும் தோல்வியை சந்தித்தார்.

எனினும், முன்னெச்சரிக்கையாக கேரளாவின் வயநாட்டிலும் ராகுல் போட்டியிட்டதால், அங்கு பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். உத்தரபிரதேசத்தில் சோனியா காந்தி போட்டியிட்ட ஒரு தொகுதியில் மட்டுமே காங்கிரஸால் வெற்றி பெற முடிந்தது.

இந்நிலையில், தம்மை மீண்டும் வெற்றி பெற செய்த ரேபரேலி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாகாந்தி கடிதம் எழுதியுள்ளார். அதில், ரேபரேலி தொகுதி வாக்காளர்கள், காங்கிரஸ் தொண்டர்கள், தம்மை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தாத சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

நாட்டின் அடிப்படை நன்மதிப்பை பாதுகாப்பேன் என்றும், காங்கிரஸின் முன்னோர்கள் கடைபிடித்த பாரம்பரியத்தை நிலைநிறுத்துவேன் என்றும், நான் தியாகம் செய்வதிலிருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டேன் என்று அவர் உறுதியளித்துள்ளார். 

ஒவ்வொரு மக்களவை தேர்தலை போலவே இந்த தேர்தலிலும் நீங்கள் என் மீதான விசுவாசத்தை வெளிப்படுத்தி உள்ளீர்கள். எனது வெற்றிக்காக பாடுபட்ட ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டருக்கும், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த நண்பர்களுக்கும் நான் நன்றி கடன் பட்டிருக்கிறேன். 

இனிவரும் காலங்கள் மிக கடுமையானதாக இருக்கும் என்பதை அறிந்துள்ளதாக தெரிவித்துள்ள சோனியா, மக்களின் பேராதரவை கொண்டு அனைத்து சவால்களையும் காங்கிரஸ் கட்சி எதிர்கொள்ளும் என நம்பிக்கை தெரிவித்தார். 

மேலும், தமது வாழ்க்கை ஒர் திறந்த புத்தகம் என்றும், மக்களே தமது குடும்பம் என்றும் கூறியுள்ள சோனியாகாந்தி, மக்களிடம் இருந்து பெறும் வலிமையே, தமது உண்மையான சொத்து என்று கூறியுள்ளார்.