This Article is From Oct 11, 2019

Xi Jinping In India: மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சென்னை வருகிறார் சீன அதிபர்!

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜி ஜின்பிங் ஆகியோர் மகாபலிபுரம் கோயில்களை சுற்றிப் பார்க்க உள்ளனர்.

பிரதமர் மோடி மற்றும் ஜி ஜின்பிங் இடையிலான முதல் உச்சி மாநாடு கடந்த ஆண்டு சீனாவின் வுஹான் பகுதியில் நடந்தது. (File)

New Delhi:

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியா மற்றும் சீன இடையே கடும் வார்த்தை போர் நடுந்து வரும் நிலையில், பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் இன்று சென்னை மாமல்லபுரத்தில் சந்தித்து பேசுகின்றனர். 

பிரதமர் மோடிக்கும் ஜி ஜின்பிங்கிற்கும் இடையிலான முதல் உச்சி மாநாடு கடந்த ஏப்ரல் 2018ல் சீனாவின் வுஹான் பகுதியில் நடந்தது. அதைத்தொடர்ந்து, இந்த இரண்டாவது உச்சிமாநாடு சென்னை அருகே உள்ள கடலோர நகரமான மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. 

இரண்டு தலைவர்களையும் வரவேற்கும் விதமாக, சென்னை விமான நிலையத்தில் இருந்து மாமல்லபுரம் செல்லும் வழிநெடுக பாரம்பரிய முறையில் வரவேற்பு அளிக்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஜின்பிங்கின் இந்திய பயணத்திற்கு முன்னதாக சீனா, 'இந்தியாவுக்கும் - பாகிஸ்தானுக்கும் இடையில் காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்' என்று கூறியது. மேலும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்த சீன அதிபர் காஷ்மீர் நிலைமையைக் கண்காணிப்பதாகக் கூறியதோடு, "முக்கிய நலன்களுக்காக" பாகிஸ்தானை ஆதரிப்பதாக இம்ரான் கானுக்கு உறுதியளித்ததாக தகவல்கள் வெளியானது. 

இதனிடையே, ‘காஷ்மீர் பிரச்சனையை இருநாடுகள் பேசி தீர்வுகாண வேண்டும்” எனச் சீன அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் சீனாவின் கருத்து குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சீன அதிபர் ஜீ ஜின்பிங், பாகிஸ்தான் இம்ரான் கான் சந்திப்பின்போது காஷ்மீர் விவகாரம் குறித்துப் பேசப்பட்டதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கிறது. 

ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில், இந்தியா ஒருபோதும் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளப் போவதில்லை. ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்ற இந்தியாவின் நிலைப்பாடு, நிலையானது மற்றும் தெளிவானது. சீனாவும் எங்கள் நிலையை நன்கு அறியும் என்றார், மேலும், இது உள்நாட்டு விவகாரம். இந்த விவகாரத்தில் பிற நாடுகள் கருத்து தெரிவிக்கக் கூடாது” என்றும் அவர் கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஜி ஜின்பிங் இடையிலான முக்கிய ஆலோசனை சனிக்கிழமை காலை நடைபெறுகிறது. இந்த சந்திப்பின் போது, எந்த புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்திடப்படாது என்றும், சந்திப்பு குறித்த எந்த கூட்டு அறிக்கைகளும் வெளியிடப்படாது என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மிக உயர்ந்த மட்டத்தில் தொடர்புகளை உருவாக்குவதும், முக்கிய பிரச்சினைகள் குறித்த கருத்துக்களை பரிமாறிக்கொள்வதும் இதன் நோக்கம் என்று அவர்கள் கூறினர்.

பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், சீன அதிபர் ஜின்பிங் இன்று மதியம் 1.30 மணிக்கு தனி விமானத்தில் சென்னை வருகிறார். முன்னதாக இன்று மதியம் 12.30 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி  சென்னைவருகிறார். அர்ஜுனனின் தவம், பஞ்ச ரதாஸ் மற்றும் கடற்கரை கோயில் ஆகிய மூன்று தளங்களின் புராதன நினைவுச் சின்னங்களைச் பிரதமர் மோடி சீன அதிபருக்கு சுற்றி காண்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பிரதமர் மோடியின் வுஹானின் வருகையின் போது, சீன அதிபர் ஜின்பிங் அவருக்கு ஹூபே மாகாண அருங்காட்சியகத்தில் தனிப்பட்ட முறையில் சுற்றிகாட்டியுள்ளார்.

.