This Article is From Jan 23, 2020

உயிர்கொல்லி ‘உஹான் வைரஸ்’… மேலும் பரவாமல் தடுக்க சீன அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!

Wuhan Virus: சீனாவில் தற்போது “லூனார் புத்தாண்டு” வருகிறது. வரும் வெள்ளிக் கிழமையிலிருந்து இந்த புத்தாண்டு ஆரம்பமாகிறது.

உயிர்கொல்லி ‘உஹான் வைரஸ்’… மேலும் பரவாமல் தடுக்க சீன அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!

Wuhan Virus: சீனாவின் பல இடங்களில் பரவியுள்ள இந்த வைரஸ், உலகின் சில இடங்களிலும் பரவ வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

Beijing:

Wuhan Virus: உலகளவில் ‘உஹான் வைரஸ்' பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் உஹான் என்னும் நகரத்தில் இருந்துதான் இந்த வைரஸ் பரவியதாகவும், அதனாலேயே இந்த புதிய வைரஸுக்கு உஹான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. 

கொரோனா வைரஸ் என்றும் அழைக்கப்படும் இந்த உயிர்கொல்லியைக் கட்டுப்படுத்த சீன அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக உஹான் நகரிலிருந்து வைரஸ் பரவலைத் தடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தது சீனா. அதனால், அந்நகரத்தைத் தற்போதைக்குத் தனிமைப்படுத்தி, வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

சீனாவின் பல இடங்களில் பரவியுள்ள இந்த வைரஸ், உலகின் சில இடங்களிலும் பரவ வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. இதுவரை உஹான் வைரஸ் பாதிப்பால் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உஹான் நகரத்தில்தான் பாதிக்கப்பட்டவர்களின் விகிதம் அதிகமாக இருக்கிறது. 

உஹான் நகரம், சீனாவின் போக்குவரத்து மையங்களில் ஒன்று. ஆனால் வைரஸ் தொற்று அதிகரிக்கக் கூடாது என்பதற்காக தற்போதைக்கு நகருக்குச் செல்லும் அனைத்துவித போக்குவரத்துகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மிக அவசியம் இல்லாத பட்சத்தில் நகரவாசிகள், வேறு எங்கும் செல்லக் கூடாது என்றும் சீன அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு சீன அரசு தரப்பு, “வைரஸ் மேலும் பரவுவதைத் தடுத்து, பலர் பாதிக்கப்படுவதை நிறுத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு வீரியமான சிகிச்சை அளிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளளது,” என்று விளக்கம் கொடுக்கிறது.

சீனாவில் தற்போது “லூனார் புத்தாண்டு” வருகிறது. வரும் வெள்ளிக் கிழமையிலிருந்து இந்த புத்தாண்டு ஆரம்பமாகிறது. இதையொட்டி சீன மக்கள், பல்வேறு இடங்களுக்குப் பயணப்பட்ட தயாராகி வந்தனர். இப்படிப்பட்ட சூழலில்தான் வைரஸ் தொற்று அதிகரித்தும் வருவது குறிப்பிடத்தக்கது.

மிருகங்கள் வாயிலாகவே இந்த வைரஸ் மனிதர்களுக்குப் பரவியிருக்கும் என்று சந்தேகப்படும் சீன அரசு தரப்பு, கள்ள விலங்கு சந்தையிலிருந்து இந்த வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கணித்துள்ளது. உஹான் வைரஸின் தாக்கம் அதிகம் இருப்பதால் உஹான் நகரத்தில், பொது நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும், மக்கள் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வைரஸைக் கட்டுக்குள் கொண்டு வரும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. 


 

.