அதிமுக கொடி கம்பம் சரிந்துவிழுந்து விபத்து: சுபஸ்ரீயை போல் மற்றுமொரு இளம்பெண் படுகாயம்!

சென்னையில் கடந்த செப்டம்பர் மாதம் சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது தண்ணீர் லாரி மோதி விபத்து நடந்தது போல, மற்றுமொரு விபத்து சம்பவம் கோவையில் நிகழ்ந்துள்ளது.

அதிமுக கொடி கம்பம் சரிந்துவிழுந்து விபத்து: சுபஸ்ரீயை போல் மற்றுமொரு இளம்பெண் படுகாயம்!

அனுராதா ராஜேஸ்வரி தனது அலுவலகத்திற்கு செல்லும் வழியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

Chennai:

கோவையில் அதிமுக கொடி கம்பம் சரிந்து விழுந்ததில், இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் நிலை தடுமாறி அவர் மீது பின்னால் வந்த லாரி மோதியதில் படுகாயம் அடைந்தார்.

கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் அனுராதா ராஜேஸ்வரி, பட்டப்படிப்பை முடித்த இவர், தனியார் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் வழக்கம்போல் நேற்று, தனது அலுவலகத்திற்கு செல்ல இருசக்கர வாகனத்தில் விமான நிலைய சந்திப்பில் இருந்து நீலாம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். 

அப்போது, கோல்டுவின்ஸ் அருகே சென்ற போது, சாலையோரம் வைக்கப்பட்டிருந்த அதிமுக கொடிக் கம்பம் கீழே சாய்ந்தது. இதில், தன் மீது கொடி கம்பம் விழாமல் இருக்க, அனுராதா பிரேக் போட்டதாகவும், அந்த நேரத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்ததாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். 

அதிமுக கொடிக் கம்பம் விழுந்த அதிர்ச்சியால்தான் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் அந்த சமயத்தில் பின்னால் வந்த லாரி அனுராதாவின் இரண்டு கால்கள் மீதும் ஏறி நசுக்கியதாகவும் அவர்கள் கூறினர். அனுராதா அவரது பெற்றோருக்கு ஒரு குழந்தை என்றும் அவரது வருமானத்திலே அவரது குடும்பம் இயங்கி வந்தது என்கின்றனர் அவரது உறவினர்கள். 

தொடர்ந்து, அனுராதா மீது ஏறிய அந்த லாரி, இருசக்கர வாகனத்தில் வந்த மற்றொருவர் மீதும் ஏறி இறங்கியுள்ளது. இதில், அவருக்கும் கைகள் மற்றும் முட்டிகளில் பலத்த காயம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. 

இதைத்தொடர்ந்து, அருகில் உள்ள மருத்துவனையில் அனுராதா அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், போலீசார் கூறுகையில், லாரி ஓட்டுநர் வேகாமாக வாகனத்தை இயக்கியதும் இந்த விபத்துக்கு முக்கிய காரணம் என்று தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக அனுராதாவின் மாமா சிவன் என்டிடிவியிடம் கூறும்போது, திங்கட்கிழமையன்று கோவை வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க. அவிநாசி நெடுஞ்சாலை, முழுவதும் அதிமுக கொடிக்கம்பங்கள் வைக்கப்பட்டிருந்தன. எனினும், போலீசார் இதனை மூடி மறைக்க முயற்சி செய்கிறனர் என்கிறார். 
 

98mbgdn8

முதல்வர் எடப்பாடியை வரவேற்க அதிமுக கொடிக் கம்பங்கள் வைக்கப்பட்டதாக அனுராதாவின் குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.

முன்னதாக சென்னை உயர் நீதிமன்றம் தமிழகம் முழுவதும் பதாகைகள் வைக்க தடை விதித்த போதிலும், மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங்கை சந்திப்பை  வரவேற்கும் விதமாக பதாகைகள் வைக்க அனுமதி அளிக்கும் படி, தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் முறையிட்டது. எனினும், உயர் நீதிமன்றம் அதற்கு சில நிபந்தனைகளுடன் அனுமதியும் வழங்கியது. 

இந்த விபத்து தொடர்பாக மூத்த போலீசார் ஒருவர் என்டிடிவியிடம் கூறும்போது, லாரி ஒட்டுநரை வேகமாக வரும்படி அவரது உரிமையாளர் அழைத்துள்ளார். அதன்படி, அவரும் வேகமாக சென்றுள்ளார். கொடி கம்பங்கள் சாலையின் மணல் பகுதியிலே வைக்கப்பட்டிருந்தது. விபத்து நடந்தது சாலையின் வலது பக்கம். அதனால், நாங்கள் லாரி ஓட்டுநர் மீது மட்டுமே வழக்கு பதிவு செய்துள்ளோம் என்று கூறியுள்ளார். 

எனினும், அனுராதாவின் மாமா போலீசார் கூறுவதை திட்டவட்டமாக மறுத்துள்ளார். கொடி கம்பம் சரிந்து விழுந்ததாலே, நிலைதடுமாறி அனுராதா சாலையின் இடதுபக்கம் வந்ததாகவும் அப்போது லாரி மோதியதாகவும் கூறியுள்ளார். 
 

a575208

சுபஸ்ரீ வழக்கிலும் முதலில் லாரி ஓட்டுநர் மீது மட்டுமே வழக்கு பதிவு செய்தனர்.  பொதுமக்களின் எதிர்ப்புகளுக்கு பின்னரே அதிமுக பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

முன்னதாக, சென்னை குரோம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் இளம்பெண் சுபஸ்ரீ. ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் சுபஸ்ரீ, கடந்த செப்.12ஆம் தேதி பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியன் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சாலையின் மீடியனில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த பேனர் ஒன்று சுபஸ்ரீ மீது கவிழ்ந்து விழுந்தது. இதில் நிலைதடுமாறிய அவர் கீழே விழுந்தார். அப்போது, பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்த சுபஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். 

சென்னையில் பல்வேறு இடங்களிலும் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயபால் அவரது மகன் திருமணத்திற்காக நீதிமன்ற உத்தரவை மீறி சாலையில் பேனர் மற்றும் கொடி கம்பங்கள் வைக்கப்பட்டிருந்தது. அந்த பேனரில் ஒன்றே சுபஸ்ரீயின் உயிரை பறித்தது. 

தமிழகம் முழுவதும் இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதைத்தொடர்ந்து, பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் எதிலும் பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்கும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்திலும் பேனர்கள், கட் அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என்று அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது நிர்வாகிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தது. 

இதனிடையே, விபத்தை ஏற்படுத்திய தண்ணீர் லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். அதேபோல், பேனரை அச்சடித்த கடைக்கும் சீல் வைக்கப்பட்டது. எனினும் பேனரை வைத்தவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழப்புக்கு காரணமான பேனரை வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே, போலீசாரின் பிடியில் இருந்து தப்பிக்க நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த ஜெயகோபால், பின்னர் வேறுவழியின்றி சரணடைந்தார்.  

இதனிடையே, சிறையில் உள்ள ஜெயகோபால் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏழை நோயாளிகளுக்கு ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் மதுரையில் தங்கி காவல்நிலையத்தில் கையெழுத்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

கோவை விபத்து சம்பவமானது, சுபஸ்ரீ வழக்கில் ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்ட அதேநாளில் நடைபெற்றுள்ளது. அந்த வழக்கிலும் முதலில் லாரி ஓட்டுநர் மீது மட்டுமே போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து, பொதுமக்களின் பலத்த எதிர்ப்புகளுக்கு பின்னரே அதிமுக பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இந்த சம்பவம் தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்தைப் பதிவிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கோவையில் அனுராதா என்ற பெண் விபத்துக்குள்ளானதற்கு அதிமுக கொடிக் கம்பம் சரிந்து விழுந்ததே காரணமெனவும், அதனை காவல்துறையினர் மறைப்பதாகவும் புகார்கள் எழுகின்றன எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள மு.க.ஸ்டாலின், அதிமுகவினரின் விளம்பர வெறிக்கு முற்றுப்புள்ளி எப்போது எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

More News