This Article is From May 16, 2020

கொரோனா தொற்றில் சீனாவைக் கடந்தது இந்தியா! பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85,000ஐ கடந்தது!!

மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, நாட்டில் உள்ள 30 நகராட்சி பகுதிகளில், ஒட்டுமொத்த கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கையில் 79 சதவிகிதத்தினர் உள்ளனர் என தெரியவருகிறது.

கொரோனா தொற்றில் சீனாவைக் கடந்தது இந்தியா! பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85,000ஐ  கடந்தது!!

மார்ச் 25 அன்று தொடங்கப்பட்ட முழு முடக்க(LOCKDOWN) நடவடிக்கையானது,  ஏப்ரல் 14 அன்று முடிவடையும் என அறிவிக்கப்பட்டது

New Delhi:

சர்வதேச அளவில் கொரோனா தொற்றால்  44 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில், இந்தியாவில் இதன் எண்ணிக்கையானது 85,215 ஆக உயர்ந்துள்ளது. இது சீனாவைக் காட்டிலும் அதிகமான எண்ணிக்கையாகும். ஆனால், அந்நாட்டின் இறப்பு விகிதத்துடன் ஒப்பிடும்போது நமது நாட்டின் இறப்பு விகிதம் குறைவே. சீனாவில், 5.5 சதவிகிதமாக இறப்பு விகிதம் உள்ளது. இந்தியாவில் 3.2 சதவிகிதமாக இறப்பு விகிதம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இதுவரை 27 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்துள்ளனர். இந்த நிலையில் இந்தியா சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 11 வது இடத்தில் உள்ளது.

சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில், மூன்றில் ஒரு பங்கு அமெரிக்காவில் உள்ளனர். இந்நாட்டில் இதுவரை 14 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 90 ஆயிரத்தினை நெருங்கிக்கொண்டிருக்கின்றது. அடுத்தாக ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் கொரோனா தொற்று பரவும் விகிதம் அதிகரித்துள்ளது. இந்த ஒவ்வொரு நாடுகளிலும் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சர்வதேச அளவில் மூன்று லட்சத்திற்கு அதிகமான மக்கள் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் வூஹான் நகரில் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்கள் தற்போது கண்டறியப்பட்டாலும், நாடு முழுவதும் 100க்கும் குறைவான மக்களே சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுவரை 79 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தொற்றிலிருந்து மீண்டு வந்துள்ளனர். 4,600க்கும் அதிகமானோர் அந்நாட்டில் உயிரிழந்துள்ளனர்.

தொற்று பாதிப்பிலிருந்து பெரிய அளவு மீண்ட சில நாடுகள் தங்கள் நாட்டில் பொருளாதார நடைமுறைகளை மீண்டும் துவக்க தொடங்கியுள்ளன. ஆனால், கொரோனா தொற்று மீண்டும் பரவும் அபாயம் உள்ளது என்கிற செய்தியானது கவலையளிப்பதாக உள்ளது.

இந்தியாவை பொறுத்த அளவில், நாடு முழுவதும் குறுக்கும் நெடுக்குமாக பெரும்பாலான மாநிலங்களில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். இந்த நிலையில் பொருளாதார மறுதொடக்கம் காரணமாக பல தளர்வுகளை ஆட்சியாளர்கள் அறிவித்தனர். நேற்றைய தகவலின்படி, நாடு முழுவதும் இறந்தவர்களின் எண்ணிக்கையானது, 2,649 ஆக உள்ளது. கடந்த 24  மணி நேரத்தில் மட்டும், 3,967 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 100 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறையின் அறிக்கை தெரிவித்துள்ளது.

புதியதாக, ஜம்மு-காஷ்மீர், பீகார் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000ஐ தொட்டுள்ளது. மறு புறத்தில், கோவா, கேரளா, மணிப்பூர் போன்ற மாநிலங்களில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது கணிசமாக குறைந்துள்ளது. கட்டுப்பாடுகளும் இங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதிக அளவு பாதிக்கப்பட்ட நகரங்களை பொறுத்த அளவில், மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. ஏறத்தாழ 27 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் இம்மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய தரவுகளின் படி புதியதாக 1,576 பேர் இம்மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாகக் கண்டறியப்பட்டுள்ளனர். இதுவரை 1,068 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல தமிழகத்தில் புதியதாக 434 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாகக் கண்டறியப்பட்டுள்ளனர். ஒட்டு மொத்தமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 10 ஆயிரத்தினை கடந்துள்ளது. அடுத்ததாக குஜராத் மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தினை நெருங்கிக்கொண்டிருக்கிறது. 

மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, நாட்டில் உள்ள 30 நகராட்சி பகுதிகளில், ஒட்டுமொத்த கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கையில் 79 சதவிகிதத்தினர் உள்ளனர் என தெரியவருகிறது.

முதலில் மார்ச் 25 அன்று தொடங்கப்பட்ட முழு முடக்க(LOCKDOWN) நடவடிக்கையானது,  ஏப்ரல் 14 அன்று முடிவடையும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது மே 17 வரை சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 17க்கு பிறகும் முழு முடக்கம் நீட்டிக்கப்படும் என கருதப்படுகிறது. ஆனால், அதிகபட்ச தளர்வுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரயில் மற்றும் விமான சேவைகளின் மறு தொடக்கம் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகின்றன.

.