This Article is From Feb 12, 2020

“தமிழக அரசை சும்மா விடமாட்டோம்!”- மு.க.ஸ்டாலின் திடீர் கொந்தளிப்பு; காரணம் என்ன?

"ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக 31 இடங்களில் கிணறுகள் தோண்டப்பட்டுள்ள நிலையில்..."

“தமிழக அரசை சும்மா விடமாட்டோம்!”- மு.க.ஸ்டாலின் திடீர் கொந்தளிப்பு; காரணம் என்ன?

"விவசாயிகளை ஏமாற்றுவதற்காக காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து முதலமைச்சர் பழனிசாமி நாடகம் ஆடுகிறார்"

தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை, வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் ‘சும்மா விடமாட்டோம்' என்று சூளுரைத்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். 

சமீபத்தில் முதல்வர் பழனிசாமி, டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார். அது குறித்தான ஆணை விரைவில் வெளியிடப்படும் என்றும் உறுதியளித்தார். இதற்கு பல தரப்பினரும் பாராட்டி வரும் நிலையில் மு.க.ஸ்டாலின், “டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எந்தத் திட்டங்களும் வரக்கூடாது என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு. அதன் ஒரு பகுதியாகத்தான் டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று பல நாட்களாக வலியுறுத்தி வந்தோம். தற்போது அப்படியொரு அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது வரவேற்கத்தக்கதுதான்.

ஆனால் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு யார் அனுமதி கொடுப்பது. மத்திய அரசு. அப்படியென்றால் அதைப் போன்ற திட்டங்கள் வரக்கூடாது என்றால் யார் ஆணையிட வேண்டும். மத்திய அரசுதானே. அது கூட தெரியாமல் முதல்வர் பழனிசாமி அறிவிப்பை வெளியிடுகிறார். 

அதுமட்டுமல்லாமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக 31 இடங்களில் கிணறுகள் தோண்டப்பட்டுள்ள நிலையில் விவசாயிகளை ஏமாற்றுவதற்காக காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து முதலமைச்சர் பழனிசாமி நாடகம் ஆடுகிறார்,” என்று விமர்சித்துள்ளார்.

மேலும் அவர், “இந்தப் பிரச்னையை இப்படியே விடமாட்டோம். விரைவில் தமிழக சட்டமன்றம் கூடவிருக்கிறது. பட்ஜெட் கூட்டத் தொடராக அது இருக்கும். அப்போது இதைவிடமாட்டோம். தமிழக அரசை சும்மா விடமாட்டோம்,” என்று எச்சரித்துள்ளார். 


 

.