This Article is From May 16, 2019

“திமுக ஆட்சிக்கு வருவதற்கு அமமுக துணை நிற்காது!”- தினகரன் தடாலடி

தங்க தமிழ்ச்செல்வன் முன்னர் பேசுகையில், “அதிமுக ஆட்சியை கவிழ்க்க திமுக-வுடன் இணையவும் தயார்” என்றார்.

“திமுக ஆட்சிக்கு வருவதற்கு அமமுக துணை நிற்காது!”- தினகரன் தடாலடி

எங்கள் நிலைப்பாடு என்னவென்றால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும் என்பதுதான்- தினகரன்

“அதிமுக ஆட்சியை கவிழ்க்க திமுக-வுடன் இணையவும் தயார்” என்று கருத்தை அமமுக-வின் கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்து பரபரப்பை கிளப்பினார். இந்நிலையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “திமுக ஆட்சிக்கு வருவதற்கு அமமுக என்றும் துணை நிற்காது” என்று தடாலடியாக கூறியுள்ளார்.

தங்க தமிழ்ச்செல்வன் முன்னர் பேசுகையில், “திமுக-வும் நாங்களும் சேர்ந்தால்தான் இந்த துரோக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப முடியும். இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பினால்தான், அடுத்து பொதுத் தேர்தல் வரும். பொதுத் தேர்தலில் அமமுக, மெஜாரிட்டியில் ஜெயித்து, அம்மா ஆட்சியை தமிழகத்தில் அமைத்துவிடும்.

ஒருவேளை திமுக, இந்த ஆட்சியை கவிழ்க்க அமமுக-விற்கு ஆதரவு கொடுக்கவில்லை என்றால், அவர்கள் பயப்படுகிறார்கள் என்றுதான் அர்த்தம். 22 தொகுதி இடைத் தேர்தலில் நாங்கள் மட்டுமே வெற்றி பெற்றாலும், நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவதற்கு 34 எம்.எல்.ஏ-க்கள் பலம் வேண்டும். எங்களிடம் அது இல்லை. அப்படியென்றால், திமுகதான் எங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். அப்படி திமுக, எங்களுக்கு ஆதரவு கொடுக்கவில்லை என்றால், திமுக எங்களைப் பார்த்து அஞ்சுகிறது என்பது மட்டும்தான் அர்த்தம்” என்று அதிரடியாக பேசினார்.

இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் பேசியுள்ள தினகரன், “திமுக ஆட்சிக்கு வர நாங்கள் உதவுவோம் என்பது போல பொய் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. அது ஒரு நாளும் நடக்காது. திமுக ஆட்சி அரியணையில் அமர அமமுக, என்றும் துணை நிற்காது. இதிலிருந்தே தெரியவில்லையா, எங்களுக்கும் அவர்களுக்கும் எந்தவித ரகசிய கூட்டும் இல்லை என்பது.

ஆட்சிக்கு வர வேண்டும் என்பது திமுக-வின், ஸ்டாலினின் ஆசை. அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள்.

எங்கள் நிலைப்பாடு என்னவென்றால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும் என்பதுதான். எடப்பாடி ஆட்சியை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் சீக்கிரமே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும். அப்போது, அதற்கு ஆதரவாக நாங்கள் நிற்போம். மே 23 ஆம் தேதிக்குப் பிறகு அனைத்தும் தெரிந்துவிடும்” என்று விளக்கமளித்தார்.

.