This Article is From Aug 05, 2019

"இன்றைய நாள் முடிவதற்குள் தெரியும்.." ஜம்மு-காஷ்மீரில் பதற்றம்: ப.சிதம்பரம் கருத்து

ஜம்மு-காஷ்மீரில் பதற்றம்; ஜம்மு-காஷ்மீரில் தவறாக எதோ நடக்க உள்ளது என்று நான் ஏற்கனவே எச்சரித்திருந்தேன் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் பதற்றம்; மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம்

New Delhi:

ஜம்மு-காஷ்மீரில் முன்னாள் முதல்வர்கள், மூத்த தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதற்கு மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். 

காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை சீர்குலைப்பதற்காக பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து, அங்கு அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூடுதல் படைகள் குவிக்கப்பட்டு வருவதால், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுமா? அல்லது மாநிலம் மூன்றாக பிரிக்கப்படுமா? என்ற சந்தேகம் நிலவி வருகிறது. இதனால் காஷ்மீரில் தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவி வருகிறது. 

இந்தச் சூழலில் நள்ளிரவு முதல் இணையதள சேவைகள் முடக்கி வைக்கப்பட்டு, முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி உள்ளிட்ட தலைவர்கள் வீடுகளை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 


இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதற்கு மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பதிவில், ஜம்மு-காஷ்மீர் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளது, தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக அனைத்து ஜனநாயக விதிமுறைகள் மற்றும் கொள்கைகளை மத்திய அரசு மீறப்போவதை காட்டுகிறது. அரசியல் தலைவர்களின் வீட்டுக் காவலை கண்டிக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். 

இன்றைய நாள் முடிவதற்குள் ஜம்மு-காஷ்மீரில் பெரிய அளவிலான நெருக்கடி இருக்குமா என்பது தெரிந்துவிடும். நல்லபடியாக முடிய வேண்டும் என நம்புகிறேன். ஜம்மு-காஷ்மீரில் நடக்கும் துரதிருஷ்டவசமான சம்பவங்களை ஏற்கனவே கண்டித்திருக்கிறேன். மத்திய அரசு ஏதோ செய்வதில் உறுதியாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து, இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கூறும்போது, நீங்கள் தனியாக இல்லை உமர் அப்துல்லா, ஒவ்வொரு இந்திய குடிமகனும் உங்களுடன் துணை நிற்பார்கள். நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடர்ந்து, நடந்து வருகிறது, உங்களுக்கு ஆதரவாக எங்களது குரல் அங்கு ஒலிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். 
 

.