This Article is From Dec 11, 2018

18 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடப்பதில் சிக்கலா?- நீதிமன்றத்தில் விவகார மனு!

இந்த வழக்கு மீண்டும் அடுத்த மாதம் 4 ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

18 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடப்பதில் சிக்கலா?- நீதிமன்றத்தில் விவகார மனு!

அதிமுக-விலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் 18 தொகுதிகள் காலியாகியுள்ளன. இதற்கு கூடிய விரைவில் இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்தத் தொகுதிகளில் தேர்தல் நடத்துவதை சிக்கலாக்கும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில், '18.9.2018 ஆம் தேதியன்று, தமிழக சட்டமன்ற சபாநாயகர், அதிமுக-விலிருந்த 18 எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இது குறித்து விசாரணை செய்த சென்னை உயர் நீதிமன்றம், தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று அறிவித்துவிட்டது. மேலும், 18 இடங்களுக்கும் சீக்கிரமே இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இந்தத் தேர்தலை நடத்த, தேர்தல் ஆணையத்துக்கு அதிக நிதி தேவைப்படும். இந்த நிதியானது மக்களின் வரிப் பணத்திலிருந்து தான் எடுத்துக் கொள்ளப்படும். கட்சித்தாவல் சட்டத்திற்குக் கீழ், 18 எம்.எல்.ஏ-க்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். எனவே, 18 பேரிடமிருந்தே தேர்தலுக்கு ஆகும் செலவை வசூலிக்க வேண்டும்' என்று கோரப்பட்டது.

இதை விசாரித்த நீதிமன்றம், ‘இடைத் தேர்தல் நடத்துவதை இதற்காகவெல்லாம் தள்ளிப் போட முடியாது' என்று கூறியது. மேலும் மனுதாரரின் கேள்விக்கு பதில் அளிக்குமாறு தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்களுக்கும், தலைமை தேர்தல் ஆணையருக்கும் உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம். இந்த வழக்கு மீண்டும் அடுத்த மாதம் 4 ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
 

.