This Article is From Feb 04, 2019

மக்களவை தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியா? ஜெயக்குமார் விளக்கம்

எந்த தேசியக் கட்சியாக இருந்தாலும், அதிமுக தலைமையில் தான் தேர்தல் கூட்டணி அமையும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியா? ஜெயக்குமார் விளக்கம்

2019ம் நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணியில், தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக இறங்கியுள்ளது. அந்த வகையில், அதிமுக சார்பாக போட்டியிடுபவர்கள் விருப்ப மனு அளிக்கும் பணி இன்று தொடங்குகிறது. தேர்தலில் போட்டியிட விருப்பமுடையவர்கள் இன்று முதல் அவர்களது விருப்ப மனுவை சமர்ப்பித்து வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், மக்களவைத் தேர்தலில் போட்டியிட அதிமுகவினர் ஆர்வத்துடன் விருப்ப மனுக்களை பெற்று வருகிறார்கள். 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றிபெறுவோம் என்றார்.

தொடர்ந்து அவரிடம் மக்களவைத் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிடுமா? என கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அவர், இது தவறான புரிதல். தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு தொடர்பாக 9 பேர் கொண்ட பங்கீட்டுக் குழுதான் முடிவு செய்யும்.

40 தொகுதிகளிலும் விருப்ப மனுவை பெற்றால் அது தனித்துப் போட்டியிடுவதற்கான சமிக்ஞை அல்ல. இறுதி நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடைபெறலாம். தேசியக் கட்சி உள்பட எந்தக் கட்சியாக இருந்தாலும், அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

.