This Article is From May 08, 2019

இதுதான் உலகத்தில் அதிகம் கடத்தப்படும் விலங்கு- காரணம் என்ன..?

பாரம்பரிய மருத்துவத்திற்காக பயன்படுத்தப்படுவதாக கூறி கடத்தப்படும் எறும்புண்ணிகள்

இதுதான் உலகத்தில் அதிகம் கடத்தப்படும் விலங்கு- காரணம் என்ன..?

விலங்குகள் கடத்தலில் முதலில் இருக்கும் எறும்புண்ணி

இன்று உலக அளவில் கருப்பு சந்தையில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது விலங்குகள் கடத்தல். நாம் அனைவருக்கும் விலங்குகள் கடத்தல் என்றாலே முதலில் நியாபகத்திற்கு வருவது யானைகளும் புலிகளும்தான். யானைகளின் தந்தங்களுக்காக அவைகள் வேட்டையாடப்பட்டு கொல்லப்படுகிறது. இந்த புலிகளின் தோல்கள் மட்டும் எலும்புகளுக்காக பலியாகிறது. பின் இந்த தந்தங்கள் மற்றும் தோல்கள் அனைத்தும், கருப்பு சந்தையில் வெவ்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு விற்கப்படுகிறது. ஆனால் விலங்குகள் கடத்தலில் இவைகளை தாண்டி ஒரு விலங்கு முதலில் இருக்கிறது. அது எந்த விலங்கு? ஏன் அந்த விலங்கு இந்த அளவில் கடத்தப்படுகிறது? தற்போது அந்த விலங்கு இனத்தின் நிலை என்ன?

யானைகள் மற்றும் புலிகளைத் தாண்டி விலங்குகள் கடத்தலில் முதலிடத்தில் இருக்கும் அந்த உயிரினம் எறும்புண்ணிதான். ஆசியா மற்றும் ஆப்ரிக்கா ஆகிய கண்டங்களின் காடுகளில் வாழும், இந்த செதில்கள் சுற்றியிருக்கும் பாலூட்டிதான், விலங்குகள் கடத்தலில் முதலிடத்தில் நிற்கிறது. 

கடத்தப்படும் இந்த உயிரினங்கள், பாரம்பரிய மருத்துவத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன எனக் கூறப்படுகிறது. இந்த எறும்புண்ணிகளுக்கு அதிக தேவை இருப்பது ஆசிய சந்தையில்தான். எறும்புண்ணிகளை இறக்குமதி செய்வதில் சீனா மற்றும் வியட்னாம் ஆகிய நாடுகள்தான் முதலிடத்தில் நிற்கின்றன. சீனாவில் இவை மருத்துவத்திற்காக ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதன் உடலை வெட்டி விற்பனை செய்துவிட்டு, அதன் செதில்களை மருத்துவத்திற்கு பயன்படுத்துகிறார்கள். இதன் செதில்கள் கேன்சர் நோயை குணப்படுத்தும் மற்றும் பெண்களின் பால் சுரக்கும் தன்மை அதிகப்படுத்தும் என்னும் நம்பிக்கையில் இவ்வாறான செயல்களில் இடுபடுகின்றனர்.

மொத்தம் ஆறு வகையிலான எறும்புண்ணிகள் இந்த உலகில் இருக்கின்றன என்றும் அவை அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டிய பட்டியலில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் இரண்டு உயிரினங்கள் அழிக்ககூடிய தருவாயில் உள்ளது என்கிறது CNN. மேலும் 2014 முதல் 10 லட்சத்திற்கு மேற்பட்ட எறும்புண்ணிகள் வேட்டையாடப்பட்டுள்ளதாக இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (IUCN) கூறுகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில், சிங்கப்பூரில் மட்டும் சுமார், 14 டன்கள் எடையிள்ள எறும்புண்ணிகளின் செதில்கள் பிடிபட்டுள்ளது. இதன் மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் 270 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவ்வாறு அழிவில் உள்ள இந்த மிருகத்தை காக்க பல தன்னார்வ அமைப்புகள் போராடி வருகின்றன. மேலும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த அரசும் பல பிரபலங்களை வைத்து காணொளிகளை உருவாக்கி வெளியிட்டு வருகிறது.

Click for more trending news


.