This Article is From Jul 16, 2019

ஆபத்து என தெரிந்தும் 100 ஆண்டு பழைய கட்டடத்தில் வசித்த மக்கள்- மும்பை விபத்தின் பின்னணி!

தங்கள் உயிருக்கே ஆபத்து என்ற போதிலும் டோங்கிரி பகுதியிலிருந்து மக்கள் வேறு இடங்களுக்குச் செல்ல தயாராக இல்லை

ஆபத்து என தெரிந்தும் 100 ஆண்டு பழைய கட்டடத்தில் வசித்த மக்கள்- மும்பை விபத்தின் பின்னணி!

இடிந்து விழுந்த கட்டடத்தை மறுகட்டமைப்பு செய்ய கடந்த 3 ஆண்டுகளாக அதிகாரிகள் வந்து ஆய்வு செய்து வந்தனர்

Mumbai:

மும்பை டோங்கிரியில் இருக்கும் 100 ஆண்டு கால பழமையான 4 மாடி கட்டடம் இன்று இடிந்து விழுந்தது. இந்த விபத்து காரணமாக 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40 பேர் கட்டட இடிபாடுகளில் சிக்கியிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இன்று காலை 11:40 மணிக்கு இந்த விபத்து நடந்துள்ளது. 

இந்தியாவின் வர்த்தக தலைநகரமாக பார்க்கப்படும் மும்பையில், இதைப் போன்ற பல சட்டவிரோத அடுக்குமாடிக் கட்டடங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. 

தெற்கு மும்பையில் அதிக மக்கள் தொகை கொண்ட டோங்கிரி பகுதியில் இருக்கும் கேசார்பாய் கட்டடம் (இடிந்துவிழுந்து விபத்தான கட்டடம்), பலருக்கு இருப்பிடம். மகாராஷ்டிரா வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமாக அங்கு நிறைய கட்டடங்கள் இருக்கின்றன. கேசார்பாய் அடுக்குமாடி குடியிருப்பு, அந்தப் பகுதியில் இருக்கும் பல கட்டடங்களின் உதாரணமே. ஒவ்வொரு முறை மும்பையில் மழை பெய்யும்போதும், டோங்கிரியின் கட்டடங்கள் இடிந்து விழுந்துவிடும் என்பது போலத்தான் இருக்கும். 

அங்க இருக்கும் சில கட்டடங்களை இனி சீரமைக்க முடியாத அளவுக்கு பாழடைந்துவிட்டன. டோங்கிரியில் கேசார்பாய் கட்டடம் இருந்த பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் முழுவதுமாக இடிக்கப்பட்டு மீண்டும் கட்டப்படும் என்றுதான் சொல்லப்பட்டது. 

இது குறித்து ஐ.ஏ.என்.எஸ் செய்தி நிறுவனத்திடம் பேசியுள்ள மும்பை கட்டட சீரமைப்பு மற்றும் மறுகட்டமைப்பு வாரியத் தலைவர் வினோத் கோசால்கர், “அந்த கட்டடத்தை சீரமைக்க பி.எஸ்.பி டெவலப்பர்ஸுக்கு அனுமதி கொடுத்திருந்தோம். ஆனால், அவர்கள் பணியை ஆரம்பிக்க காலம் தாழ்த்திவிட்டார்கள். இது குறித்து தீவிர விசாரணை செய்யப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார். 

இடிந்து விழுந்த கட்டடத்தை மறுகட்டமைப்பு செய்ய கடந்த 3 ஆண்டுகளாக அதிகாரிகள் வந்து ஆய்வு செய்து வந்தனர். ஆனால், வேலைகள் ஆரம்பிக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள்.

டோங்கிரியில் வசித்து வரும் இன்னொருவரோ, “மும்பை முனிசிபல் கார்ப்பரேஷனுக்கு கட்டடங்களின் நிலை குறித்து எடுத்துச் சொல்லி, சீரமைத்துக் கொடுக்குமாறு கேட்ட வண்ணம் இருந்தோம். ஆனால், எப்போதும் எங்களிடம் நிதி இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துவிடுவார்கள்” என்று நொந்து கொள்கிறார். 

தங்கள் உயிருக்கே ஆபத்து என்ற போதிலும் டோங்கிரி பகுதியிலிருந்து மக்கள் வேறு இடங்களுக்குச் செல்ல தயாராக இல்லை. தங்களது வாழ்வாதாரம், பள்ளிகள், அலுவலகங்கள் என எல்லாம் அருகில் இருப்பதே மக்களின் இந்த மனநிலைக்குக் காரணம். வசிப்பதற்கு வீடு கிடைப்பது, மும்பையில் மிகவும் சிரமமாகும். 


 

.