This Article is From Sep 03, 2019

தமிழக பாஜகவின் அடுத்த தலைவராக இந்த இருவரில் ஒருவர் தேர்வாக வாய்ப்பு!!

உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் பாஜகவின் அடுத்த தலைவர் மீதான எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறது.

தமிழக பாஜகவின் அடுத்த தலைவராக இந்த இருவரில் ஒருவர் தேர்வாக வாய்ப்பு!!

இன்னும் ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தர ராஜன் தெலங்கானா கவர்னராக பொறுப்பேற்க உள்ள நிலையில் அவர் வகித்து வந்த தமிழக பாஜக தலைவர் பொறுப்பு காலியாக உள்ளது. அந்த இடத்திற்கு பலரது பெயர் அடிபடும் நிலையில் அவர்களில் 2 பேரின் பெயர் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பாஜகவின் தமிழக தலைவராக தமிழிசை சவுந்தர ராஜன் கடந்த 2014-ம் ஆண்டு முதல் இருந்து வந்தார். காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் மகளான அவர், சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பும், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகத்தில் மகப்பேறியல் பிரிவில் பட்டமும் பெற்றவர்.

கடந்த 1999-ல், தென் சென்னை மருத்துவ அணியின் பாஜக செயலராக பொறுப்புக்கு வந்த அவர், 2001-ல் மாநில மருத்துவரணி பொதுச் செயலாளர், 2005-ல் அனைத்திந்திய மருத்துவர் அணி ஒருங்கிணைப்பாளர், 2007-ல் கட்சியின் மாநில பொதுச்செயலாளர்,  2010-ல் துணைத் தலைவர், 2013-ல் தேசிய செயலாளர் என படிப்படியாக கட்சிப் பதவிகளுக்கு முன்னேறினார். 

2014-ல் அவரை பாஜக தலைமை தமிழக பாஜக தலைவராக தேர்வு செய்தது. 2019-மக்களவை தொகுதி தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட அவர், திமுக வேட்பாளர் கனிமொழியிடம் தோல்வியடைந்தார். இந்த நிலையில் அவரை தெலங்கானா கவர்னராக அறிவித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு வெளியிட்டார். இதையடுத்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் என அனைத்து பொறுப்புகளையும் தமிழிசை ராஜினாமா செய்திருக்கிறார்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021-ல் சட்டமன்ற தேர்தலை தமிழக எதிர்கொள்ளவிருக்கிறது. இந்த நிலையில், இவ்விரு தேர்தல்களையும் சிறப்பாக எதிர்கொள்ளும் வகையில் அடுத்த தலைவர் யார் என்கிற எதிர்பார்ப்பில் பாஜக தொண்டர்கள் உள்ளனர். 

அடுத்த தலைவர் பதவிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி. ராதாகிருஷ்ணன், எச். ராஜா, உள்ளட்டோரது பெயர்கள் அடிபடுகின்றன. 

இருப்பினும், கட்சியின் மாநில செயலாளர் மற்றும் செய்தி தொடர்பாளராக இருக்கும் கே.டி. ராகவன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகிய 2 பேரின் பெயர்தான் தலைவர் பொறுப்புக்கு முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அதே சூழலில் தொண்டர்களின் ஆதரவை பெருவாரியாக பெற்றவரும், கட்சியின் தேசிய செயலாளராக இருப்பவருமான எச். ராஜாவின் பெயரும் தமிழக தலைவர் பதவிக்கு பரிசீலனையில் உள்ளது. நிர்வாகிகளை கலந்து ஆலோசித்த பின்னர் இன்னும் ஓரிரு நாட்களில் அடுத்த தலைவர் யார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

.