This Article is From Mar 26, 2020

கொரோனா விவகாரத்தில் சீனா பக்கம் சாய்ந்த WHO: டிரம்ப் போடும் குண்டு!!

Coronavirus Pandemic: கொரோனா வைரஸ், இதுவரை 170 நாடுகளுக்குப் பரவியுள்ளது.

கொரோனா விவகாரத்தில் சீனா பக்கம் சாய்ந்த WHO: டிரம்ப் போடும் குண்டு!!

COVID-19: 4,71,518 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 21,293 பேர் கொரோனாவால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர் என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல் தெரிவிக்கிறது. 

ஹைலைட்ஸ்

  • சீனாவின் உஹான் நகரத்தில்தான் கொரோனா வைரஸ் உருவானது
  • தற்போது சீனாவில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது
  • உலகளவில் இத்தாலிதான் தற்போது கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது
Washington:

கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பான WHO, சீனா பக்கம் சாய்ந்துவிட்டதாக பகீர் கிளப்பும் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். 

வாஷிங்டனில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அதிபர் டிரம்ப் இது குறித்துப் பேசும்போது, “உலக சுகாதார அமைப்பு, கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனா பக்கம் சாய்ந்துவிட்டது. இதனால் பலருக்கும் அதிருப்திதான். 

பலரும் இந்தக் கருத்துக்கு ஆதரவாகவே பேசி வருகிறார்கள்,” என்று கூறினார். அமெரிக்காவின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செனட்டர், மார்கோ ரூபியோ, ‘உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டது' என்று குற்றம் சுமத்திய  நிலையில், டிரம்பும் அவரது கருத்தை ஆமோதிப்பது போல பேசியுள்ளார். 

அதேபோல இன்னொரு மக்கள் பிரதிநிதியான கிரேக் ஸ்டூப், “சீனாவின் செய்தித் தொடர்பாளர் போலத்தான் உலக சுகாதார அமைப்பு செயல்பட்டுள்ளது. இந்த வைரஸ் அச்சுறுத்தல் முடிவுக்கு வந்த பின்னர் சீனாவும் உலக சுகாதார அமைப்பும் பதில் சொல்ல வேண்டியிருக்கும்,” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். 

கொரோனா வைரஸ் சீனாவில் விஸ்வரூபம் எடுத்தபோது, உலக சுகாதார அமைப்பின் இயக்குநர், டெட்ரோஸ் அதோனம் கெப்ரியஸுஸ், அந்நாடு எடுத்து வரும் எதிர் நடவடிக்கைகளை பாராட்டிப் பேசினார். 

கடந்த ஜனவரி மாதம் சீனாவுக்கு, தன் குழுவுடன் சென்றிருந்தார் டெட்ரோஸ். அங்கு அவர் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை நேரில் சந்தித்து உரையாடினார். சந்திப்புக்குப் பின்னர் டெட்ரோஸ், “கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தொடர்பாக அடுத்தக்கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சீன அதிபர் ஜின்பிங்குடன் இன்று விவாதிக்கப்பட்டது. சீனா, இந்த வைரஸ் தொற்றுக்கு எதிராக எடுத்து வரும் நடவடிக்கைகளையும், வெளிப்படையாக தகவல்களைப் பரிமாறுவதையும் உலக சுகாதார அமைப்புப் பாராட்டுகிறது,” என்று ட்விட்டர் மூலம் தெரிவித்தார். 

சீனப் பயணத்தை முடித்த பின்னர் டெட்ரோஸ், “சீனாவிலிருந்து திரும்பி வந்துவிட்டேன். அங்கு அதிபர் ஜின்பிங்குடன், மிக வெளிப்படையாக பேச முடிந்தது. கொரோனா அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்தும் முழுப் பொறுப்பையும் அவர் ஏற்றுக் கொண்டுள்ளார். சீனா, தனது ஒத்துழைப்பு மற்றும் ஸ்திரத்தன்மை மூலம் தன் நாட்டு குடிமக்களையும், உலக குடிமக்களையும் இந்த அச்சுறுத்தலில் இருந்து காக்க உறுதிபூண்டுள்ளது,” என்று இன்னொரு ட்வீட்டைப் பதிவிட்டார். 

கொரோனா வைரஸ், இதுவரை 170 நாடுகளுக்குப் பரவியுள்ளது. 4,71,518 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 21,293 பேர் கொரோனாவால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர் என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல் தெரிவிக்கிறது. 


 

.