This Article is From Jan 21, 2019

யார் பிரதமர் வேட்பாளர் என்று மேடையில் இருப்பவர்கள் கூற முடியுமா? தமிழிசை கேள்வி

இத்தனை பேர் மேடையில் இருக்கிறார்களே அவர்களிடம் ஒரே ஒரு கேள்வி.. யார் பிரதமர் வேட்பாளர் என்று ஒரு கேள்வி கேளுங்கள்

யார் பிரதமர் வேட்பாளர் என்று மேடையில் இருப்பவர்கள் கூற முடியுமா? தமிழிசை கேள்வி

இத்தனை பேர் மேடையில் இருக்கிறார்களே அவர்களிடம் ஒரே ஒரு கேள்வி.. யார் பிரதமர் வேட்பாளர் என்று ஒரு கேள்வி கேளுங்கள். அவர்களால் பதில் கூற முடியுமா என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தலைமையில் பாஜகவுக்கு எதிரான கட்சிகள் ஒன்றிணையும் ஐக்கிய இந்திய பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, மு.க.ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், அரவிந்த் கெஜ்ரிவால், சந்திரபாபு நாயுடு, சரத்பவார் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, பிரதமர் நரேந்திர மோடி சிலரை பார்த்து பயப்படுவார். அதில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் ஒருவர் ஆகும், மம்தாவை பார்த்து மோடி அஞ்சுகிறார்.

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் என்பது இரண்டாவது சுதந்திர போராட்டம் ஆகும். பரவி வரும் இந்துத்துவ தீவிரவாதத்தை நாம் ஒன்றிணைந்து தடுத்து நிறுத்துவோம். மோடியை தோற்கடித்து வீட்டிற்கு அனுப்புவோம், நாட்டை காப்பாற்றுவோம் என்றார்.

மேலும், மத்திய அரசை கார்ப்பரேட் நிறுவனமாக்கியவர் மோடி, அவர் மீண்டும் பதவிக்கு வந்தால், நாடு 50 வருடங்கள் பின்நோக்கி சென்றுவிடும் என்றும் அவர் எச்சரித்தார்.

இந்நிலையில், இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன், ஒன்றிணைந்த கூட்டணி என்கிறார்கள், உருக்குலைந்த கூட்டணி என்கிறேன் நான். உருப்பெற முடியாத கூட்டணி, கருவிலேயே கலையக்கூடிய கூட்டணி.

இத்தனை பேர் மேடையில் இருக்கிறார்களே அவர்களிடம் ஒரே ஒரு கேள்வி யார் பிரதமர் வேட்பாளர் என்று ஒரு கேள்வி கேளுங்கள்... அந்தக் கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் இவர் தான் என மேடையில் கூற முடியுமா?

பிரதமர் மோடியை பார்த்து மற்றவர்கள் பயப்படுகிறார்கள். ஸ்டாலினுக்கு சவால் விடுகிறேன், நீங்களா, நாங்களா என ஒரு கை பார்த்துவிடுவோம். நாங்கள் கேலிக்குரிய கூட்டணியை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்று அவர் கூறினார்.
 

.