வாட்ஸ்அப் மூலம் ஃபார்வர்டு செய்யும் செய்திகளுக்கு புதிய விதிமுறை..!

ஒரு ஃபார்வர்டு செய்தியை இனி இந்திய பயனர்கள் 5 பேருக்கோ அல்லது 5 குழுவுக்கோ மட்டும் தான் அனுப்ப முடியும்

வாட்ஸ்அப் மூலம் ஃபார்வர்டு செய்யும் செய்திகளுக்கு புதிய விதிமுறை..!
New Delhi:

வாட்ஸ்அப் மூலம் பல போலி செய்திகள் பரவுவதாக இந்திய அரசு, தொடர்ந்து புகார் தெரிவித்து வந்த நிலையில், அந்நிறுனவம் ஒரு புதிய விதிமுறை வகுத்துள்ளது.

வாட்ஸ்அப் சாட் செயலியை இந்தியாவில் கிட்டத்தட்ட 20 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இந்திய இளைஞர்கள் பலரும் பயன்படுத்தும் இந்த செயலி மூலம் போலி செய்திகள் பரவுவதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்தப் போலி செய்திகளால் சமூக அமைதி சீர்குலையும் வகையில் பல விஷயங்கள் நடந்துள்ளதாகவும் கூறப்பட்டது.

இப்படிப்பட்ட நிலையில்தான், வாட்ஸ்அப் நிறுவனம், இந்திய பயனர்களுக்கு ஒரு புதிய விதிமுறையை வகுத்துள்ளது. அதன்படி ஒரு ஃபார்வர்டு செய்தியை இனி இந்திய பயனர்கள் 5 பேருக்கோ அல்லது 5 குழுவுக்கோ மட்டும் தான் அனுப்ப முடியும். இதுவே மற்ற நாட்டில் இருக்கும் பயனர்கள், ஒரு ஃபார்வர்டு செய்தியை 20 பேருக்கோ அல்லது 20 குழுவுக்கோ அனுப்ப முடியும்.

இந்த புதிய நடவடிக்கை குறித்து வாட்ஸ்அப் நிறுவனம், ‘சமீபத்தில் விடப்பட்ட அப்டேட் மூலம் வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களுக்கு இந்த புதிய விதிமுறை பொருந்தும். மேலும், போலி செய்திகளை பயனர்கள் தெரிந்து கொள்வதற்கு ஒரு வீடியோவையும் நாங்கள் உருவாக்கியுள்ளோம். அதன் மூலம் போலி செய்திகளை யூசர்ஸ் சுலபமாக இனம் காண முடியும். வாட்ஸ்அப்பில் இருக்கும் பாதுகாப்பு அம்சங்களை நாங்கள் தொடர்ந்து உயர்த்துவோம்’ என்றுள்ளது.