தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை திடீரென்று உயர்வதற்கு காரணம் என்ன? - பின்னணி என்ன??

இந்திய அளவில் செய்யப்படும் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையைவிட தமிழகத்தில் இரு மடங்கிற்கு மேல் பரிசோதனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை திடீரென்று உயர்வதற்கு காரணம் என்ன? - பின்னணி என்ன??

"சென்னையில் கொரோனா குறித்த பரிசோதனை எண்ணிக்கையை சென்னை மாநகராட்சி தொடர்ந்து அதிகரித்து வருகிறது"

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் நேற்று 266 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது
  • சென்னையில் மட்டும் நேற்று 203 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது
  • தமிழகத்தில் தற்போது 1,611 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

தமிழகத்தில் நேற்று 266 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 203 பேர். ஒட்டுமொத்த அளவில் 3,023 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 38 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 1,379 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால், தற்போது தமிழகத்தில் 1,611 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

கடந்த ஒரு வார காலமாகவே தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது. 

இதற்கு முக்கிய காரணம், சமீப நாட்களாக தமிழக அளவிலும் சென்னையிலும் கொரோனா பாதிப்பு குறித்து பரிசோதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததே என்று சொல்லப்படுகிறது. 

கடந்த மே 1 ஆம் தேதி நிலவரப்படி, இந்திய அளவில் 10 லட்சம் மக்களுக்கு 708 பேரிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் சொல்கிறது. அதே நேரத்தில் தமிழகத்தில் 10 லட்சம் பேருக்கு 1,685 பேரிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னையில் மிக அதிகமாக 10 லட்சம் பேருக்கு 5,225 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்திய அளவில் செய்யப்படும் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையைவிட தமிழகத்தில் இரு மடங்கிற்கு மேல் பரிசோதனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் சென்னையில் சுமார் 7 மடங்கு அதிக பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த காரணத்தினால்தான் சமீப நாட்களாக தமிழகத்திலும் சென்னையிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது. 

இது குறித்து சென்னை மாநகராட்சி, “சென்னையில் கொரோனா குறித்த பரிசோதனை எண்ணிக்கையை சென்னை மாநகராட்சி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

அதிக சோதனைகள் செய்யும்போது அதிக பாசிட்டிவ் முடிவுகள் வரும். இதன் மூலம் நோய் தொற்றையும் கட்டுப்படுத்த முடியும்,” என்கிறது.