This Article is From Aug 05, 2019

சட்டப் பிரிவு 35ஏ என்றால் என்ன - அது ஏன் காஷ்மீரில் முக்கியத்துவம் பெறுகிறது..?

காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருக்கும் சிறப்பு அந்தஸ்துகளை பாதுகாப்பதில் அங்கிருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன

சட்டப் பிரிவு 35ஏ என்றால் என்ன - அது ஏன் காஷ்மீரில் முக்கியத்துவம் பெறுகிறது..?

சட்டப் பிரிவு 35ஏ என்பது, ஜம்மூ காஷ்மீரின் மன்னராக இருந்த ஹரி சிங்கால் அறிமுகம் செய்யப்பட்டது.

ஹைலைட்ஸ்

  • சிறப்பு சட்டப் பிரிவு மூலம் வெளியாட்கள் காஷ்மீரில் சொத்து வாங்க முடியாது
  • ஆர்ட்டிகல் 370-ன் ஒரு பிரிவே 35ஏ
  • இந்த சிறப்பு அந்தஸ்து, காஷ்மீருக்கு தனி சட்ட சாசன உரிமையை அளித்துள்ளது
Srinagar:

மத்திய அரசின் நடவடிக்கைகளால் ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு, காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருக்கும் 35ஏ மற்றும் 370 சிறப்பு சட்டப் பிரிவுகளில் கைவைக்கக் கூடாது என்று அங்குள்ள அரசியல் கட்சிகள், அரசை எச்சரித்துள்ளன.

கடந்த ஒரு வாரமாக ஜம்மூ காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் பெருமளவு குவிக்கப்பட்டு வருகின்றனர்.  கடந்த வெள்ளிக் கிழமை, மத்திய அரசு, மிகவும் அசாதாரண வகையில் அமர்நாத் யாத்ரிகர்களை உடனடியாக மாநிலத்தில் இருந்து வெளியேறுமாறு கேட்டுக் கொண்டது. இதனால் மாநிலத்தில் பதற்றமான நிலை உள்ளது. மக்களும் அன்றாடப் பொருட்களை வீட்டில் வாங்கிக் குவித் வண்ணம் உள்ளனர்.  

மேலும் மாநிலத்தில் உள்ள பிரதான அரசியல் கட்சித் தலைவர்களான ஒமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்டி ஆகியோர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர். இதுவும் சிறப்புப் பிரிவு திருத்தத்துக்கான நடவடிக்கைதான் என்று சொல்லப்படுகிறது. 

காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருக்கும் சிறப்பு அந்தஸ்துகளை பாதுகாப்பதில் அங்கிருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன. சட்டப் பிரிவு 35ஏ என்பது, ஜம்மூ காஷ்மீரின் மன்னராக இருந்த ஹரி சிங்கால் அறிமுகம் செய்யப்பட்டது. 1927 ஆம் ஆண்டு அமலுக்கு வந்த இந்தச் சட்டப் பிரிவின் மூலம், வெளி மாநிலத்தவர்கள் ஜம்மூ காஷ்மீரில் சொத்து வாங்க முடியாது என்றும் அரசு வேலைகளில் சேர முடியாது என்றும் சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்டது. ஆர்ட்டிகல் 370-ன் ஒரு பிரிவுதான் 35ஏ. 370 மூலம், காஷ்மீருக்கென்று தனியாக சட்ட சாசனம், கொடி, தேசிய பாதுகாப்பைத் தவிர்த்து சட்டம் இயற்றிக் கொள்ளும் உரிமை ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. 

மேலும் பிரிவு 35ஏ மூலம், ஜம்மூ காஷ்மீரில் வாழும் மக்களுக்கு நிரந்தரக் குடியுரிமை அளிக்கும் உரிமையும் அம்மாநில அரசுக்கு உள்ளது. இதன் மூலம் 10 ஆண்டுகளக்கு மேல் மாநிலத்தில் வசிப்பவர்களுக்கு நிரந்தரக் குடியுரிமை கொடுக்கும் உரிமை அரசுக்கு உள்ளது. இப்படிப்பட்ட சூழலில்தான் ‘வீ தி சிட்டிசன்ஸ்' என்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனம், உச்ச நீதிமன்றத்தில் 35ஏ பிரிவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. 

35ஏ சட்டப் பிரிவுக்கு ஆதரவாக இருப்போர், “ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தை நிர்ணயிப்பதே 35ஏ சட்டப் பிரிவுதான். அதை நீக்க மாட்டோம் என்று அம்மக்களுக்கு உறுதி அளித்திருக்கிறோம். அதை நீக்கும் பட்சத்தில் அங்கிருக்கும் பிரிவினைவாதிகள், இந்தியாவுக்கு எதிராக உள்ளூர் மக்களை திசைத் திருப்ப வாய்ப்புள்ளது” என்று கூறுகின்றனர். 

இந்த சிறப்பு சட்டப் பிரிவுக்கு எதிரான கொள்கையைத்தான் பாஜக கொண்டுள்ளது. கடந்த ஆண்டு வரை பாஜக, அங்குள்ள பிடிபி கட்சியுடன் இணைந்து ஆட்சி நடத்தி வந்தது. ஆனால், சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவுகளில் இரு கட்சிகளுக்கும் இருந்த வேறுபாடுதான் கூட்டணிப் பிளவுக்கு வித்திட்டது என்று கூறப்படுகிறது. சமீபத்தில் கூட பாஜக-வின் அருண் ஜெட்லி, “காஷ்மீரின் சிறப்பு சட்டப் பிரிவு அவ்வளவு ஸ்திரமாக இல்லை. காரணம், அது சட்ட சாசனத்தை பின் கதவு வழியாக அடைந்தது” என்றார். 

இதை மனதில் வைத்துதான் ஜம்மூ காஷ்மீரில் இருக்கும் பிரதான அரசியல் கட்சிகள் ஒமர் அப்துல்லாவின் தந்தையான ஃபரூக் அப்துல்லாவின் வீட்டில் ஒன்றாக சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். இதைத் தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஃபரூக் அப்துல்லா வாசித்தார். “சட்டப் பிரிவுகள் 370 மற்றும் 35ஏ ஆகியவை மாற்றப்பட்டால் காஷ்மீரில் எதிர்பாராத விளைவுகள் ஏற்படும்” என்று கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடமும் அளிக்க உள்ளனர். 
 

.