This Article is From Jun 26, 2019

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! கனமழைக்கு வாய்ப்பு!!

வடக்கு வங்கக்கடலில் வரும் 30-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! கனமழைக்கு வாய்ப்பு!!

வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் வடமாநிலங்கள் கிழக்கு மாநிலங்களில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்மாநிலங்களான கர்நாடகா, கேரளாவிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறியதாவது, வடக்கு வங்கக்கடலில் வரும் 30ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடக்கு நோக்கி நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக ஜூன் 28 முதல் ஜூன் 30 வரை கிழக்கு மத்திய வங்கக்கடல் பகுதி சீற்றமாக காணப்படும். தொடர்ந்து, ஜூலை ஒன்று முதல் 3 ஆம் தேதி வரை, வடகிழக்கு, கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய இந்தியா மற்றும் மேற்கு கடற்கரை பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் வடமாநிலங்கள் கிழக்கு மாநிலங்களில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

இதனிடையே, தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், தென்மேற்கு பருவமழை காரணமாகவும், அடுத்த இரண்டு நாட்களில், ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமானது வரையில் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, கடலூர் மாவட்டம் வேப்பூரில், 6 சென்டி மீட்டர் மழையும், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் தலா 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

சென்னையை பொருத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

.