This Article is From Feb 15, 2020

இஸ்லாமியப் பெருமக்களுடன் களத்தில் துணை நிற்போம்: டிடிவி தினகரன் உறுதி

அமைதி வழியில் இத்தகைய போராட்டங்களை முன்னெடுப்பவர்கள் மீது ஆட்சியாளர்களும் காவல்துறையினரும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடுவது தேவையில்லாமல் தேன்கூட்டில் கை வைப்பது போல் ஆகிவிடும்.

இஸ்லாமியப் பெருமக்களுடன் களத்தில் துணை நிற்போம்: டிடிவி தினகரன் உறுதி

வண்ணாரப்பேட்டையில் சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெற வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாக நேற்று மாலை சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமைத் திருத்தச்சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்தது. அதனை அடுத்து பழைய வண்ணாரப்பேட்டையில் கூடி இருந்த
போராட்டக்காரர்களை கலைப்பதற்காக போலீசார் தடியடி நடத்தியதோடு கண்மூடித்தனமான தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளனர். போலீசாரின் இந்த தாக்குதலில் ஒரு சிலர் படுகாயமடைந்ததாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டதாக 120 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் உடனடியாக வைரலாக பரவியது. சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தில் டெல்லியில் போலீசார் தாக்குதலில் ஈடுபட்டது போல், சென்னையிலும் நடந்த இந்த சம்பவம் இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. 

இதையடுத்து ஒரு சில மணி நேரங்களில் போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதியிலும் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, இவ்விவகாரம் மேலும் பெரிதாவதை தடுக்க வண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் இஸ்லாமிய அமைப்பினருடன் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேச்சுவார்த்தை நடத்தினார். 

இதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. எனினும், காவல்துறையினரின் அணுகுமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இஸ்லாமியர்களின் போராட்டம் நள்ளிரவைத் தாண்டியும் நீடித்தது.

இந்நிலையில், இது தொடர்பாக, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, "சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிராக அமைதி வழியில் போராடிய முஸ்லிம் மக்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் நிகழாமல் பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டிய கடமை காவல்துறையினருக்கு இருக்கிறது என்பதை அவர்கள் மறந்து விடக்கூடாது. 

ஜனநாயக நாட்டில் எதிர்ப்புகளைப் பதிவு செய்ய தங்களுக்கு இருக்கும் அடிப்படை உரிமையைக் கொண்டு அமைதி வழியில் இத்தகைய போராட்டங்களை முன்னெடுப்பவர்கள் மீது ஆட்சியாளர்களும் காவல்துறையினரும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடுவது தேவையில்லாமல் தேன்கூட்டில் கை வைப்பது போல் ஆகிவிடும்.

இப்போராட்டங்களில் ஏற்கனவே பல்வேறு இடங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நிர்வாகிகள் பங்கேற்று தங்களின் ஆதரவைத் தெரிவித்துள்ளனர். அது போன்றே, இப்பிரச்னையில் ஜனநாயக வழியில், அமைதியாக போராடும் இஸ்லாமியப் பெருமக்கள் உள்ளிட்டோருக்கு எப்போதும் களத்தில் துணையாக நிற்போம் என்று அவர் உறுதி தெரிவித்துள்ளார்.

.