This Article is From Sep 25, 2018

‘கிரிமினல் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் குறித்து நாடாளுமன்றமே முடிவெடுக்கட்டும்’-நீதிமன்றம்

இந்த வழக்கை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் நாரிமன், குவாலிகர், சந்திராசூத், இந்திரா மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது

கிரிமினல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டாலே தேர்தலலிருந்து போட்டியிட தடை விதிக்க வேண்டும், மனுதாரர்கள்

New Delhi:

கிரிமினல் வழக்கில் சிக்கியுள்ள அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படுமா என்பது குறித்தான வழக்கில் உச்ச நீதிமன்றம், ‘அது குறித்து நாங்கள் முடிவெடுக்க முடியாது. நாடாளுமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும்’ என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. 

கிரிமினல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் அரசியல்வாதிகளை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தடுக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் பல தரப்பினர் மனு தாக்கல் செய்தனர். அதை ஒரு வழக்காக எடுத்து விசாரித்து வந்தது உச்ச நீதிமன்றம். இந்த வழக்கை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் நாரிமன், குவாலிகர், சந்திராசூத், இந்திரா மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

இந்நிலையில் வழக்கின் தீர்ப்பில் நீதிமன்றம், ‘கிரிமினல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை தகுதி நீக்கும் செய்யும் உரிமை எங்களுக்கு இல்லை. நாடாளுமன்றம் தான் கிரிமினல்கள் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய நலனை முன் வைத்து நாடாளுமன்றம் கிரிமினல் குற்றவாளிகளுக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும். அப்படிப்பட்ட சட்டத்தைத் தான் மக்களும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்’ என்று தெரிவித்துள்ளது. 

மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், ஒரு வழக்கில் குற்றம் நிரூபிக்கும் வரை ஒருவரை குற்றவாளி என்று சொல்ல முடியாது என்று வாதாடியுள்ளார். அவர் மேலும், ‘வெறுமனே குற்றம் சாட்டப்படுவதால் அவரை தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலக்கி வைக்க முடியாது. அதேபோல அரசியல் தலைவர்கள் மீது சாதரணமாக வழக்குகள் பதியப்படும். அதையும் நீதிமன்றம் கணக்கில் கொள்ள வேண்டும்’ என்று வாதிட்டுள்ளார். 

அதே நேரத்தில் எதிர்தரப்பில், ‘அரசியல்வாதிகள் மீது கிரிமினல் குற்றம் சுமத்தப்பட்டால், அந்த வழக்கு விசாரணை நடப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதனாலேயே பல குற்றவாளிகள், மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு விடுகின்றனர்’ என்று பதில் வாதம் வைக்கப்பட்டுள்ளது. வேணுகோபாலின் மகனான கிருஷ்ணன் வேணுகோபால் தான் எதிர்தரப்பினர் சார்பில் வழக்காடினார். அவர், ‘கிரிமினல் குற்றச்சாட்டுகளில் சிக்கியிருக்கும் அரசியல்வாதிகளை தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தடுக்கு ஒரு சட்டம் கொண்டு வரலாம். இல்லையென்றால் அரசியல் கட்சிகளே அவர்களுக்கு சீட் கொடுக்காமல் இருக்கும்படி செய்யலாம்’ என்று வாதாடினார். 

.