This Article is From Jul 02, 2018

"நீதிபதி ஆக ஆசைப்படுகிறேன்"- தமிழ்நாட்டின் முதல் திருநங்கை வழக்கறிஞர்

“நான் படிப்படியாக உயர்ந்து ஒருநாள் நீதிபதியாக வேண்டும்” என்கிற சத்யஸ்ரீ ஷர்மிலா, பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு பெற்ற முதல் திருநங்கை ஆவார்

Chennai:

தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் புதிதாக பதிவு செய்து கொண்ட 400 சட்ட பட்டதாரிகளில் சத்யஸ்ரீ ஷர்மிலாவும் ஒருவர்.

சென்னை: “நான் படிப்படியாக உயர்ந்து ஒருநாள் நீதிபதியாக வேண்டும்” என்கிற சத்யஸ்ரீ ஷர்மிலா, பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு பெற்ற முதல் திருநங்கை ஆவார்.

முழு மனநிறைவுடன் இருக்கும் ஷர்மிலா, பார் கவுன்சிலில் திருநங்கை - வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டது, கடந்த சில ஆண்டுகளாக செய்த முயற்சிகளுக்கு கிடைத்த சாதனை, என்றார்.தற்போது அதை அடைந்துவிட்டதனால், அடுத்த இலக்குகளை நோக்கி முன்னேற இருப்பதாக கூறுகிறார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் நேற்று புதிதாக பதிவு செய்து கொண்ட 400 சட்ட பட்டதாரிகளில் ஷர்மிலாவும் ஒருவர்.

“எனக்கு இப்போது 36 வயது ஆகிறது, நான் கடினமாக உழைத்து ஒருநாள் நீதிபதி ஆவேன் என்கிற நம்பிக்கையுடன் இருக்கிறேன்”என பிடிஐ-யிடம் தெரிவித்தார். மேலும் சட்டத்தில் எந்த பிரிவை தொடர வேண்டும் என்பது பற்றி தீர்மானிக்கவில்லை என்றார்.

ஷர்மிலா, கடந்த 2007ம் ஆண்டு சேலம் மத்திய சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்தவுடனே, 2008ம் ஆண்டிலே வழக்கறிஞராக பதிவு செய்திருக்கலாம், ஆனால் திருநங்கை - வழக்கறிஞராக பதிவு செய்து கொள்ள வேண்டும் என்பதால் காத்திருக்க முடிவு செய்ததாக தெரிவித்தார்.

உறுப்பினர் சேர்க்கை விழாவில் பேசிய நீதிபதி பி.என் பிரகாஷ், தன்னுடைய வாழ்நாளில் ஒரு திருநங்கையை, உயர்நிதிமன்ற நீதிபதியாக காண வேண்டும் என்பது தன்னுடைய ஆசை என தெரிவித்தார்.

சட்டம் படிக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் தனக்கு விருப்பம் இல்லை எனவும், அவருடைய தந்தை தான் ஷர்மிலா படிப்பில் சிறந்து விளங்க வேண்டும் என விரும்பியதாக தெரிவித்தார். 2014ம் ஆண்டு (நால்சா வழக்கு) வெளிவந்த உச்சநீதிமன்ற தீர்ப்பு தான் எனக்கு தைரியமும், நம்பிக்கையும் தந்து வழக்கறிஞர் உடையை அணிவதற்கான நேரம் வந்துவிட்டதாகவும் உணர்த்தியது.

உச்சநீதிமன்ற அந்த மைல்கல் தீர்ப்பு, பாலினத்தை தேர்வு செய்வது திருநங்கை ஒருவரின் உரிமை என்பது உறுதி செய்து, மத்திய, மாநில அரசுகளை அந்த தேர்வுகளுக்கு சட்டப்பூர்வ அங்கிகாரம் வழங்கி முறையே பாலினத்தை ”ஆண், பெண் மற்றும் திருநங்கை” என மூன்று பிரிவுகளாக அடையாளம் காணவும் உத்தரவிட்டது.

பின்தங்கிய இராமநாதபுரம் மாவட்டத்தின் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஷர்மிலா, பரமக்குடியில் உதயக்குமார் என்கிற பெயரில் வளர்ந்து பள்ளி, கல்லூரி படிப்பை முடித்தார்.

பட்டம் முடித்து அடுத்த பத்து ஆண்டுகளுக்கு, திருநங்கைகள் சார்ந்த என்.ஜீ.ஓ உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணி செய்திருக்கிறார்.

தன்னுடைய அடையாளத்தைப் பற்றி குறிப்பிடுகையில், “காலப்போக்கில் நான் ஒரு பெண் என்பதை உணர்ந்தேன், திருநங்கையாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

ஷர்மிலா தற்போது செங்கல்பட்டு அருகே உள்ள திருநங்கைகள் குடியிருப்பான புக்கத்துறை நடராஜபுரம் கிராமத்தில் வசித்து வருகிறார். இங்குள்ள என்னுடைய சகோதரிகளுக்கு சட்ட சேவை வழங்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

திருநங்கைகள் செயற்பாட்டாளர் பானு அவர்கள் குறிப்பிடுகையில். “இது ஒரு மிகப்பெரும் சாதனை. இது சட்டம் படிக்கும் மற்ற திருநங்கைகளுக்கும் ஊக்குவிக்கும் சக்தியாக இருக்கும்” என்றார்.

இந்திய பார் கவுன்சில் துணை சேர்மன் எஸ். பிரபாகரன் கூறுகையில், “சட்டத் தொழில் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று. சட்டத்தில் பணி என்பது ஒதுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு உதவி செய்வதற்கு ஏற்றதாகும்” என்றார்.

.