This Article is From Nov 18, 2018

‘இரவு, பகல் பாராமல் வேலை செய்த தமிழக அரசுக்குப் பாராட்டு!’- விஜயகாந்த் அறிக்கை #GajaCyclone

கஜா புயல் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களும் உள் மாவட்டங்கள் பலவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன

‘இரவு, பகல் பாராமல் வேலை செய்த தமிழக அரசுக்குப் பாராட்டு!’- விஜயகாந்த் அறிக்கை #GajaCyclone

கஜா புயல் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களும் உள் மாவட்டங்கள் பலவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கஜா புயல் குறித்தும், அதில் தமிழக அரசின் செயல்பாடு குறித்தும் அறிக்கை மூலம் கருத்து தெரிவித்துள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழக அரசும், அமைச்சர்களும் கஜா புயல் பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்ற விழிப்புடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது பாராட்டுக்குரியது. இரவும், பகலும் பாராமல் கண் விழித்து விரைவாக செயல்பட்ட அனைத்துத் துறை அமைச்சர்களும் அதிகாரிகளும் உடனுக்குடன் ஆணை பிறப்பித்து, சிறப்பாக பணிகளை ஆற்றியதை தேமுதிக சார்பில் வரவேற்கிறோம்.

மிக முக்கிய புயல் பாதிப்புக்கான இடமாக வேதாரண்யம் மற்றும் நாகை உள்ளது. அங்கு அதிக வீடுகள் இழப்பு, மீனவர்கள் படகுகள் சேதம், 36-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார்கள் என்ற செய்தி வேதனைக்குரியது.

உடனடியாக மத்திய அரசு புயல் நிவாரண நிதியை தமிழக அரசுக்கு தந்து பாதிக்கப்பட்ட மீனவ மக்களுக்கு படகுகள் சரி செய்வதற்கும், வீடுகள் சேதம் அடைந்ததை சரி செய்வதற்கும், சாலைகள் மற்றும் போக்குவரத்து சீரமைப்பதற்கும், மின் கம்பங்கள் உடனடியாக சரி செய்வதற்கும் உதவிட வேண்டும்.

தமிழக அரசு கஜா புயல் நிவாரணத் தொகையை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் கஜா புயல் பாதிப்பை உடனடி கவனத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட இடங்களுக்கும், அந்தப் பகுதி மக்களுக்கும் வேண்டிய அனைத்து உதவிகளையும் உடனடியாக செய்ய வேண்டுமென தேமுதிக சார்பில் கேட்டுக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

புயல் தமிழகத்தைக் கடந்துவிடும் என்ற போதும் இன்றும் மாநிலத்தின் பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம், ‘திருச்சி, நாமக்கல், திண்டுக்கல், மதுரை, தேனி, கரூர், கோவை, திருப்பூர், நீலகிரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என்று கூறியுள்ளது.

.