“கூடா நட்பால்…”- பாமக-வின் இன்றைய நிலைமை; வறுத்தெடுத்த திருமா!!

"தற்போது பெரியார் சிலை சேதத்துக்குப் பின்னணியில் பாமகவின் முன்னாள் நிர்வாகி இருப்பது உள்ளபடியே வருத்தமளிக்கிறது"

“கூடா நட்பால்…”- பாமக-வின் இன்றைய நிலைமை; வறுத்தெடுத்த திருமா!!

அரசியல் களத்தில் எதிரெதிர் துருவங்களில் செயல்பட்டு வரும் கட்சிகள் பாட்டாளி மக்கள் கட்சியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும். இருவரும் பரஸ்பரம் வாதப் போர் புரிந்து கொள்வது வழக்கமே. அப்படித்தான், தற்போது பாமகவைச் சீண்டியுள்ளார் விசிகவின் தலைவர் தொல்.திருமாவளவன்.

சமீபத்தில் செங்கல்பட்டு மாவட்டம், சாலவாக்கம் பகுதியில் நிறுவப்பட்டிருந்த பெரியார் சிலையை அடையாளம் தெரியாத நபர்கள் சேதப்படுத்தினார்கள். இது தொடர்பாக பாமகவின் முன்னாள் நிர்வாகி கைதாகியிருப்பதாக தகவல் வந்துள்ளது. இதைச் சம்பந்தப்படுத்திப் பேசிய திருமாவளவன், “பெரியார், அம்பேத்கர் உள்ளிட்டத் தலைவர்களின் சிலைகள் தொடர்ந்து சேதப்படுத்தப்பட்டு வருவதற்குக் காரணம் அதிமுக அரசின் மெத்தனப் போக்கே. 

தற்போது பெரியார் சிலை சேதத்துக்குப் பின்னணியில் பாமகவின் முன்னாள் நிர்வாகி இருப்பது உள்ளபடியே வருத்தமளிக்கிறது. பெரியாரின் கொள்கைகளால் கட்டமைக்கப்பட்டது தங்கள் கட்சி என்று பாமக பல காலமாக சொல்லி வருகிறது. ஆனால், இன்று அவரின் சிலையையே சேதப்படுத்தும் அளவுக்கு சென்றுள்ளது. இது கூடா நட்பால் பாமக திசை மாறியுள்ளதைக் காண்பிக்கிறது. 

தலைவர்களின் சிலைகளை யார் சேதப்படுத்தினாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் தமிழக அரசு வீரியத்துடன் செயல்பட வேண்டும்,” என்று வலியுறுத்தியுள்ளார். 
 

Listen to the latest songs, only on JioSaavn.com