This Article is From Jun 05, 2020

மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்ககோரி ஆர்ப்பாட்டம்! விசிக அறிவிப்பு

தமிழ்நாடெங்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக அரசு விதித்துள்ள சமூக இடைவெளியைக் கடைபிடித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்ககோரி ஆர்ப்பாட்டம்! விசிக அறிவிப்பு

ஜூன் 8-ம்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவப் படிப்பில் மத்திய தொகுப்பு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு(ஓபிசி)இடஒதுக்கீடு, சிறப்புக் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார்துறைகளில் இடஒதுக்கீடு வழங்கவேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடெங்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களின் முன்பு ஜூன் 8 ஆம் தேதி காலை 11 மணிக்கு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக  அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

மருத்துவப் படிப்பில் மத்திய தொகுப்பு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காமல் மத்தியில் ஆளும் பாஜக அரசு வஞ்சித்து வருகிறது. இந்த சமூக அநீதியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.உடனடியாக அவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

தற்போது உயர் சிறப்பு நிறுவனங்கள் ( institution of excellence ) என 8 நிறுவனங்களில் எவருக்கும் இட ஒதுக்கீடு இல்லை என மத்திய அரசு விலக்கி வைத்துள்ளது. இட ஒதுக்கீடு அளித்தால் அந்த நிறுவனங்களின் சிறப்பு குன்றிவிடும் என்பதே அதற்குக் காரணமாக சொல்லப்படுகிறது. 

இட ஒதுக்கீட்டின் மூலம் வருகிறவர்கள் திறமை குறைந்தவர்கள் என்ற கருத்தாக்கத்தை வலுப்படுத்துவதாக இது இருக்கிறது. இதை ஏற்றுக்கொண்டால் இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் தகுதி, திறமை அற்றவர்கள் என்னும் கருத்தாக்கத்தை ஒப்புக் கொண்டதாக அமைந்துவிடும். எனவே, இத்தகைய உயர் சிறப்பு நிறுவனங்களிலும் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

மோடி அவர்கள் பிரதமராகப் பொறுப்பேற்றதற்குப் பிறகு தனியார்மயமாக்கல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பேரிடர் நெருக்கடியைப் பயன்படுத்திக்கொண்டு மத்திய பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயப்படுத்தப் போவதாக நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார். 

இந்த பொதுத்துறை நிறுவனங்கள் மக்கள் வரிப்பணத்தால் உருவானவை. இதில் சுமார் 15 இலட்சம் பேர் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இட ஒதுக்கீட்டு உரிமை இருப்பதால்தான் இலட்சக்கணக்கான பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் இதில் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளனர். 

இவற்றைத் தனியார்மயமாக்குவதன்மூலம் அந்த வேலை வாய்ப்பு பறிபோகும். மக்கள் வரிப்பணத்தில் உருவான இந்த நிறுவனங்கள் தனியாருக்குத் தாரை வார்ப்பதை எவ்வாறு ஏற்க இயலும்? எனவே, பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கும் அறிவிப்பை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும், தற்போதுள்ள அனைத்துத் தனியார்துறைகளிலும் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் இடஒதுக்கீட்டுக்கென சட்டமியற்ற வேண்டுமென்றும் மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

இக்கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடெங்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக அரசு விதித்துள்ள சமூக இடைவெளியைக் கடைபிடித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் சமூக நீதியின்பால் அக்கறைகொண்ட அனைவரும் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  

.