This Article is From Oct 03, 2019

‘நான் கலங்கினேன்… அவர் உறுதியாக நின்றார்…’- ப.சிதம்பரத்தைப் பார்த்த Vairamuthu!

"அவர் உடல் எடை கொஞ்சம் குறைந்திருக்கலாம். அவர் நிறம் சற்று கருத்திருக்கலாம். ஆனால், உள்ளத்தின் உறுதி மட்டும் சற்றும் குறையவில்லை"- Vairamuthu!

‘நான் கலங்கினேன்… அவர் உறுதியாக நின்றார்…’- ப.சிதம்பரத்தைப் பார்த்த Vairamuthu!

"சிதம்பரத்தின் வயது கருதியும், உடல்நிலை கருதியும் தொண்டு கருதியும் அவருக்கு நீதிமன்றம் பிணை வழங்கும் என்று நம்புகிறோம்” - Vairamuthu

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் (INX Media Case) டெல்லி திகார் சிறையில் உள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் (P Chidambaram), நீதிமன்ற காவலை அக்டோபர் 17 ஆம் தேதி வரை நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும், அவருக்கு வீட்டுச் சாப்பாடு வழங்கவும் அனுமதி வழங்கியுள்ளது. இன்று அவரை நீதிமன்றத்தில் சந்தித்துள்ளார் கவிஞர் வைரமுத்து. 

சந்திப்பிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் வைரமுத்து, “நான் இன்று ப.சிதம்பரம் அவர்களைப் பார்த்தேன். அவர் இந்தியாவின் முன்னாள் உள்துறை அமைச்சர் என்பதற்காக மட்டும் அல்ல. அவர் நாட்டின் முன்னாள் நிதி அமைச்சர் என்பதற்காக மட்டும் அல்ல. அவர் என் அறிவுத் தோழர். அவர் என் இலக்கியச் சகோதரர். இந்தியாவுக்கு வெளியே தமிழர்களின் அரசியல் அடையாளமாக திகழக் கூடிய ஒரு பெருமகன். 

அவர், என்னைக் கண்டதும், நான் அவரைக் கண்டதும் நான் கண் கலங்கினேன். நான் உணர்ச்சிவசப்பட்டேன். அவர் உறுதியாக நின்றார். திருக்குறலை மறுபார்வை செய்ய வாய்ப்புக் கிடைத்திருப்பதாக சொன்னார். 

அவர் உடல் எடை கொஞ்சம் குறைந்திருக்கலாம். அவர் நிறம் சற்று கருத்திருக்கலாம். ஆனால், உள்ளத்தின் உறுதி மட்டும் சற்றும் குறையவில்லை. நீதிமன்றத்தை மதிக்கிறோம், வணங்குகிறோம். ஆனால், சிதம்பரத்தின் வயது கருதியும், உடல்நிலை கருதியும் தொண்டு கருதியும் அவருக்கு நீதிமன்றம் பிணை வழங்கும் என்று நம்புகிறோம்” என்று உருக்கமாக பேசினார். 

கடந்த 2007-இல் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதில், ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

.