This Article is From Dec 03, 2019

“தினமும் பலாத்கார செய்திதான்… பெத்தவங்க மனசு…”- நாடாளுமன்றத்தில் Vaiko உருக்கம்!

Vaiko - "தாயே தெய்வம் என்று பேணிக் காப்பது நம் கலாசாரம்"

“தினமும் பலாத்கார செய்திதான்… பெத்தவங்க மனசு…”- நாடாளுமன்றத்தில் Vaiko உருக்கம்!

Vaiko - 'பெண் பிள்ளைகளை வெளியில் அனுப்பும் பெற்றோர், அந்த பிள்ளை சொன்ன நேரத்திற்கு வீட்டுக்குத் திரும்பவில்லை என்றால் பதற்றமடைகிறார்கள்'

கடந்த சில தினங்களாக இந்திய அளவில் தொடர்ந்து பாலியல் பலாத்கார சம்பவங்கள் தொடர்பான செய்திகள், கூட்டு பாலியல் பலாத்கார தொடர்பான தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. பலரும் இதைப் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்குக் கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இது குறித்து நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உருக்கமாக பேசியுள்ளார், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ (Vaiko).

சமீபத்தில் ஐதராபாத்தில் பெண் மருத்துவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம், ராஜஸ்தானில் 6 வயதுச் சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்த சம்பவம், கோவையில் பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை சம்பவம் என தொடர்ந்து பெண்கள் துன்புறுத்தப்படும் செய்திகள் தேசிய அளவில் அதிர்வலைகளை கிளப்பி வருகின்றன. பல்வேறு சட்டங்கள் போட்ட பின்னரும் இந்த குற்றச் செயல்களின் எண்ணிக்கை குறையவில்லை என்பது முக்கிய குற்றச்சாட்டாக இருக்கிறது. 

இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர், மிகவும் கொதிப்புடன் கருத்து தெரிவித்துள்ளனர். பலரும், “இதைப் போன்ற கொடூர குற்றங்கள் செய்யும் நபர்களுக்கு உடனடியாக தண்டனை கொடுக்கும் வகையில் சட்டம் கொண்டு வர வேண்டும்,” என்று கூறுகின்றனர். 

இந்த விவகாரம் குறித்து மாநிலங்களவையில் பேசிய வைகோ, “இந்த நாட்டில் பெண்கள் தெய்வங்களாக வழிபடப்படுகிறார்கள். தாயே தெய்வம் என்று பேணிக் காப்பது நம் கலாசாரம். ஆனால், தினம் தினம் பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்படுவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஐதரபாத்தில் அல்லது கோயம்புத்தூரில் அல்லது வேறு எங்காவது இதைப் போன்ற சம்பவங்கள் அன்றாடம் நடக்கின்றன. 

பெண் பிள்ளைகளை வெளியில் அனுப்பும் பெற்றோர், அந்த பிள்ளை சொன்ன நேரத்திற்கு வீட்டுக்குத் திரும்பவில்லை என்றால் பதற்றமடைகிறார்கள். அவர்களின் மனநிலையை சற்று நினைத்துப் பாருங்கள். இதைத் தடுக்க மிகவும் கறாரான நடவடிக்கை அவசியம். இரும்புக் கரம் கொண்டு கயவர்களை ஒடுக்கிட வேண்டும்,” என்று வலியுறுத்தினார். வைகோவின் கோரிக்கையை மற்றவர்களும் ஆமோதித்தனர். 

.