This Article is From Jun 28, 2019

“வீட்டை காலி செய்யுங்க..!”- சந்திரபாபுவுக்கு எதிராக ஜெகன் எடுத்த அடுத்த அஸ்திரம்

முன்னதாக கிருஷ்ணா நதியோரம் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளது என்று சொல்லி சந்திரபாபு நாயுடு கட்டிய ‘பிரஜா வேதிகா’ கட்டடம் இடிக்கப்பட்டது

நாயுடுவின் வீட்டிற்கு அருகிலேயே கட்டப்பட்ட பிரஜா வேதிகா என்கின்ற அந்த கட்டடத்தின் மதிப்பு 8.9 கோடி ரூபாய்

ஹைலைட்ஸ்

  • சந்திரபாபு நாயுடு வீட்டிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது
  • நாயுடுவின் வீட்டையும் சேர்த்து 20 வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது
  • நோட்டீஸில், நாயுடுவின் வீடு சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளது எனத் தகவல்
New Delhi:

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, சென்ற வாரம், “கிருஷ்ண நதியை ஒட்டியுள்ள அனைத்து சட்டவிரோத கட்டடங்களும் இடிக்கப்படும்” என்று உறுதிபூண்டார். இதையொட்டி, விஜயவாடாவில் கிருஷ்ணா நதிக் கரையை ஒட்டியுள்ள 20 வீடுகளுக்கு ஆந்திர அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதில் ஆந்திராவின் முன்னாள் முதல்வரான சந்திரபாபு நாயுடு, தனது குடும்பத்துடன் தங்கியுள்ள வீடும் அடங்கும். 

நாயுடுவின் பங்களாவில், அதை காலி செய்வதற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் இருந்து விஜயவாடாவுக்கு ஆந்திர அரசு நிர்வாகம் மாற்றியமைக்கப்பட்டதைத் தொடர்ந்து சந்திரபாபு நாயுடு, விஜயவாடாவுக்கு வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக அவர் அங்குதான் வசித்து வருகிறார். 

ஆந்திர அரசு அனுப்பியுள்ள நோட்டீஸில், “6 ஏக்கர் பரப்பளவில் இந்த கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதில் தரைத்தளம் சிமென்ட் மூலம் போடப்பட்டுள்ளது. ஒரு நீச்சல் குளம் உள்ளது. ஹெலிப்பேட் ஒன்றும் உள்ளது. முதல் தளத்தில் தங்கும் வசதி கொண்ட அறைகள் உள்ளன. 10 தற்காலிக ஷெட்களும் உள்ளன. இவை அனைத்தும் கிருஷ்ணா நதிக் கரையிலிருந்து 100 மீட்டருக்குள் இருக்கிறது. இது சட்டவிரோதமாகும். முறையான அனுமதி வாங்கப்படாமல் இந்த பங்களா கட்டப்பட்டுள்ளது. இந்த பங்களாவை உடனடியாக காலி செய்ய வேண்டும் அல்லது 7 நாட்களில் முறையான பின்னூட்டம் அளிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக கிருஷ்ணா நதியோரம் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளது என்று சொல்லி சந்திரபாபு நாயுடு கட்டிய ‘பிரஜா வேதிகா' கட்டடம் இடிக்கப்பட்டது. அந்தக் கட்டடத்தில்தான் நாயுடு, முதல்வராக இருந்தபோது அரசு சார்பான சந்திப்புகளை நடத்தி வந்தார். 

நாயுடுவின் வீட்டிற்கு அருகிலேயே கட்டப்பட்ட பிரஜா வேதிகா என்கின்ற அந்த கட்டடத்தின் மதிப்பு 8.9 கோடி ரூபாய். முன்னர் அமைந்திருந்த நாயுடு தலைமையிலான ஆந்திர அரசு சார்பில் அந்த கட்டடம் கட்டப்பட்டது. 

கடந்த ஜூன் 4 ஆம் தேதிதான் சந்திரபாபு நாயுடு, “எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்ற பிரஜா வேதிகா கட்டடத்தைப் பயன்படுத்திக் கொள்ள எனக்கு அனுமதி கொடுக்க வேண்டும்” என்று முதல்வர் ஜெகனுக்குக் கடிதம் எழுதினார். 

பிரஜா வேதிகா கட்டடம் இடிக்கப்பட்டது தொடர்பாக, வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றமோ, ‘சட்ட விரோதமாக இருந்த கட்டடத்தை இடித்தது குறித்து கேள்வியெழுப்ப முடியாது. முன்னர் நிர்வாகத் துறை அமைச்சர்களாக இருந்த சந்திரபாபு நாயுடு மற்றும் பி.நாராயணாவிடமிருந்து கட்டடத்துக்கு ஆன செலவைத் திரும்ப பெறலாம்' என்று உத்தரவிட்டது.

இந்த விவகாரம் குறித்து சந்திரபாபு நாயுடு, “அரசு சொத்தான ஒரு கட்டடத்தை இடிப்பது என்பது மடத்தனமான விஷயம். மாநிலத்தில் பல இடங்களில் பல சிலைகள் முறையான அனுமதி வாங்காமல் நிறுவப்பட்டுள்ளன. அதையெல்லாம் முதல்வர் இடிப்பாரா. அவரின் தந்தையான ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் பல சிலைகள் முறையான அனுமதி வாங்காமல் கட்டப்பட்டவைதான். அதையெல்லாம் அவர் இடிக்கத் தயாரா” என்று கேள்வி எழுப்பியுள்ளார். 


 

.