This Article is From May 30, 2020

அமெரிக்காவில் உள்ள சீன மாணவர்களுக்கு நெருக்கடி: டிரம்ப் அறிவிப்பும் எழுந்த சிக்கலும்!

உலகிலேயே கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது அமெரிக்காதான்.

அமெரிக்காவில் உள்ள சீன மாணவர்களுக்கு நெருக்கடி: டிரம்ப் அறிவிப்பும் எழுந்த சிக்கலும்!

கொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கையில் டிரம்ப் தோல்வியுற்றதை மறைக்கவே, மொத்த கவனத்தையும் அவர் சீனா மீது திருப்புகிறார் என்று அமெரிக்க எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி குற்றம் சாட்டுகின்றது. 

Washington:

இங்கிலாந்து நாட்டின் காலணியாக இருந்த ஹாங் காங் நகரம் சீனாவின் ஒரு பகுதியாக உள்ளது. சீனாவின் ஒரு பகுதியாக இருந்தாலும் ஹாங் காங்கிற்கு என்று சிறப்பு அந்தஸ்துகள் உள்ளன. அதை சிதைக்கும் வகையில் சீன தரப்பு தொடர்ந்து நடந்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலையில் ஹாங் காங்கிற்கு என்று பிரத்யேகமான பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளது சீன அரசு. இதற்கு உலக அளவில் பல்வேறு நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சீனாவின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஹாங் காங்கிற்கு அளித்து வந்த சிறப்பு சலுகைகளை நீக்குவதாக அறிவித்துள்ளார். மேலும் சில சீன மாணவர்களுக்குத் தடை விதிக்கப்படும் என்றும் அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

ஹாங் காங் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் டிரம்ப், “ஹாங் காங்கிற்கு என்று ஒரு பெருமை உள்ளது. அதைக் குலைக்கும் வகையில் சீனா நடந்து கொள்கிறது. இது ஹாங் காங் மக்களுக்கு செய்யும் இழுக்கு, சீன மக்களுக்கு செய்யும் இழுக்கு. ஏன், உலக மக்களுக்கே செய்யும் இழுக்கு” என்றார். 

மேலும் அவர், “உலக சுகாதார அமைப்பு, சீனாவுக்கு சாதகமாக நடந்து வருகிறது. இதனால் அமெரிக்காவுக்கும் உலக சுகாதார அமைப்புக்கும் இடையில் இருக்கும் உறவை துண்டிக்கப் போகிறோம்,“ என்றும் கூறியுள்ளார். 

இவையெல்லாவற்றையும் விட, சீனா - அமெரிக்கா உறவில் மிகப் பெரும் தாக்கம் ஏற்படுத்தும் விதமாக, சீன ராணுவத்துடன் ஏதோ ஒரு வகையில் தொடர்பில் இருக்கும் அமெரிக்காவில் பயிலும் அந்நாட்டு மாணவர்களுக்குத் தடை விதிக்கப் போவதாக அறிவித்துள்ளார் டிரம்ப்.

அமெரிக்க கல்வி நிறுவனங்களிலிருந்து சீன மாணவர்களை வெளியேற்றுவது என்பது, அக்கல்வி நிறுவனங்களின் நிதி நிலைமையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது. காரணம் அமெரிக்க பல்கலைக்கழகங்களில், வெளிநாட்டு மாணவர்களிலேயே சீனாவைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம் பேர் பயின்று வருகிறார்கள். 

கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் அமெரிக்காவில், 3,70,000 சீன மாணவர்கள் கல்வி கற்றுள்ளார்கள். டிரம்பின் இந்த நடவடிக்கையானது இளங்கலை மாணவர்களை பாதிக்காது என்றும் கூறப்படுகிறது. 

உலகிலேயே கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது அமெரிக்காதான். அங்கு சமீபத்தில் கொரோனா வைரஸால் ஒரு லட்சம் பேர் உயிரிழந்துள்ளார்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியானது. இப்படி கொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கையில் டிரம்ப் தோல்வியுற்றதை மறைக்கவே, மொத்த கவனத்தையும் அவர் சீனா மீது திருப்புகிறார் என்று அமெரிக்க எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி குற்றம் சாட்டுகின்றது. 

அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஹாங் காங்கிற்கு எதிராக சீனா நடவடிக்கை எடுப்பதற்கு ஐ.நா சபையில் கண்டனக் குரல் எழுப்பியுள்ளன. அதற்கு சீனா, தங்கள் உள்நாட்டு விவகாரத்தில் வெளிநாடுகள் தலையிடக் கூடாது என்று பதிலடி கொடுத்துள்ளது. 

.