This Article is From Feb 21, 2020

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் இந்தியச் சுற்றுப்பயணத் திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு!!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முதன்முறையாக இந்தியாவுக்கு வருகிறார். கடந்த 8 மாதங்களில் மட்டும் 4 முறை ட்ரம்பும், மோடியும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். 

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 2 நாட்கள் சுற்றுப் பயணமாக இந்தியா வருகிறார்.

New Delhi:

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் இந்தியப் பயணத் திட்டத்தின் விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ட்ரம்ப் 24-ம்தேதி இந்தியா வருகிறார். 

முதலில் குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்குச் செல்லும் ட்ரம்ப் அங்கு 'நமஸ்தே ட்ரம்ப்' என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அவருடன் பிரதமர் நரேந்திர மோடியும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்த நிகழ்வில் லட்சக்கணக்கில் மக்கள் திரள்வார்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

நமஸ்தே மோடி என்ற நிகழ்ச்சி இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை கலாச்சாரம், பண்பாடு உள்ளிட்டவற்றை விளக்கும் வகையில் அமையும். 

இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவிஷ் குமார் கூறுகையில், 'அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அகமதாபாத்திற்கு மதியம் வருகிறார். அங்கிருந்து நேராக மோதரா மைதானத்திற்குச் செல்கிறார். அங்கு நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் ட்ரம்ப் பங்கேற்கிறார். விமான நிலையத்திலிருந்து நேராக மைதானத்திற்கு ட்ரம்ப் செல்வார். இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.

இதுவரையில் 28 மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். 

அமெரிக்காவின் ஹவுஸ்டன் நகரில் ஹவுதி மோடி என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதன் மாதிரி அமைப்பில் நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சி நடைபெறும். இதில் மோடி, ட்ரம்ப் ஆகியோர் மேடையைப் பகிர்ந்துகொண்டு உரையாடுவார்கள் என்று கூறியுள்ளார். 

தனது அகமதாபாத் பயணத்தை முடித்துக் கொண்டு ட்ரம்ப் நேராக ஆக்ரா செல்கிறார். அவரது வருகைக்காக ஆக்ரா நகரமும், தாஜ்மகாலும் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. இந்த பயணத்தை முடித்துக் கொண்டு கடைசியாக ட்ரம்ப் டெல்லி செல்கிறார். அங்கு இந்தியா - அமெரிக்கா இருதரப்பு உறவு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. 

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முதன்முறையாக இந்தியாவுக்கு வருகிறார். கடந்த 8 மாதங்களில் மட்டும் 4 முறை ட்ரம்பும், மோடியும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். 

.