This Article is From Feb 19, 2020

இந்திய பயணத்தின் போது வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகுமா? சந்தேகம் எழுப்பும் டிரம்ப்!

பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்து தள்ளிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய வருகையை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பிப்.24 மற்றும் 25ம் தேதிகளில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வருகை தர உள்ளார். (File)

Washington, United States:

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள அதிபர் தேர்தலுக்கு முன்னதாக இந்தியாவுடன் பெரிய ஒப்பந்தங்கள் எதுவும் மேற்கொள்ளப்படுமா என்பது தனக்கு தெரியவில்லை என்றும், இந்தியாவுடன் மிகப்பெரிய ஒப்பந்தம் பின்னர் செய்யப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதன் மூலம் டிரம்பின் இந்திய பயணத்தின் போது, முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் எதுவும் கையெழுத்தாகது என்பது தெளிவாக தெரிகிறது. 

இதுதொடர்பாக நேற்றைய தினம் ஆண்ட்ரூஸில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளலாம். எனினும், பின்னதாக மேற்கொள்ள மிகப்பெரிய ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தி வருவேன் என்று அவர் தெரிவித்துள்ளார். 

அதிபர் டிரம்ப் வரும் பிப்.24 மற்றும் 25ம் தேதிகளில் இந்திய பயணம் மேற்கொள்ள உள்ளார். இதையொட்டி, அவரிடம் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் நடைபெறுமா என கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இந்தியாவுடன் நாம் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறோம். தொடர்ந்து அது நடந்து வரும். ஆனால், அது தேர்தலுக்கு முன்னதாக நடைபெறுமா என்பது தனக்கு தெரியவில்லை என்று கூறிய அவர், இந்தியாவுடன் மிகப்பெரிய ஒப்பந்தம் பின்னர் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார். 

இந்தியாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கான முக்கிய நபரான அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லைட்ஹைசர், அதிபர் டிரம்புடன் இந்தியாவுக்கு வர வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், அதிகாரிகளும் இந்த தகவலை நிராகரிக்கவும் இல்லை. 

அமெரிக்க-இந்தியா வர்த்தக உறவுகள் குறித்து வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்த அதிபர் டிரம்ப், "நாங்கள் இந்தியாவால் நன்றாக நடத்தப்படவில்லை" என்று கூறியுள்ளார். மேலும், பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டிய அவர், தான் பிரதமர் மோடியை மிகவும் விரும்புவதாகவும் கூறியுள்ளார்.  தொடர்ந்து, தனது இந்திய பயணத்தை எதிர்நோக்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தனது இந்திய பயணத்தின் போது, தன்னை வரவேற்க விமான நிலையத்திற்கும், நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கும் இடையில் ஏழு மில்லியன் மக்களைக் கொண்டிருப்போம் என்று மோடி அவரிடம் கூறியதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். அந்த கிரிக்கெட் மைதானம் இன்னும், முழுமையாக நிறைவு பெறாமல் இருந்து வருகிறது. எப்படி இருந்தாலும், அதுவே உலகின் மிகப்பெரிய மைதானமாக இருக்கபோகிறது. எனவே இது மிகவும் உற்சாகமானதாக இருக்கும் என்று கூறிய அவர், நீங்கள் அனைவரும் நிச்சயம் இதனை அனுபவிப்பீர்கள் என்று நம்புவதாகவும் அவர் கூறினார். 
 

.