This Article is From Sep 19, 2019

US GSP: அமெரிக்காவின் வர்த்தக முன்னுரிமை நாடுகள் பட்டியலில் இந்தியா மீண்டும் இணைய வாய்ப்பு!!

இந்தியாவை மீண்டும் Generalized System of Preferences (GSP) பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று 40-க்கும் அதிகமான எம்.பி.க்கள் கோரிக்கை வைத்தனர். விரைவில் இந்தியா அமெரிக்காவின் வர்த்தக முன்னுரிமை நாடுகள் பட்டியலில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

US GSP: அமெரிக்காவின் வர்த்தக முன்னுரிமை நாடுகள் பட்டியலில் இந்தியா மீண்டும் இணைய வாய்ப்பு!!

கடந்த ஜூன் மாதத்தின்போது அமெரிக்கா இந்தியாவை பட்டியலில் இருந்து நீக்கியது.

New Delhi:

வர்த்தக ரீதியில் பல்வேறு சலுகைகள் பெற வழி செய்யும் அமெரிக்காவின் வர்த்தக முன்னுரிமை நாடுகள் பட்டியலில் (Generalized System of Preferences (GSP) இந்தியா மீண்டும் இணைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கான தகுதிகளை இந்தியா தற்போது பெற்றிருப்பதாக மத்திய வெளியுறவு செயலர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பயணம் செல்லவுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இந்தியாவுக்கு சாதகமான முடிவுகள் எடுக்கப்படும் என நம்பப்படுகிறது. 

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஆயிரக்கணக்கான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் மாதத்திற்கு முன்பாக இந்தியா அமெரிக்காவின் வர்த்தக முன்னுரிமை நாடுகள் பட்டியலில் இருந்தது. இதன் மூலம், இந்தியாவுக்கு வரிச்சலுகைகள் கிடைத்தன. இதன்படி கடந்த ஆண்டு மட்டும் சுமார் 39 ஆயிரம் கோடி அளவுக்கு இந்தியா வரிச்சலுகையை பெற்றது. 

இருப்பினும், அமெரிக்க பொருட்களுக்கு இந்தியாவில் கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்படுவதாக அந்நாடு கருதியது. இதன் தொடர்ச்சியாக வர்த்தக முன்னுரிமை நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியாவை கடந்த ஜூன் மாதம் அமெரிக்க அரசு நீக்கியது. 

இந்த நடவடிக்கை  அமெரிக்கா மற்றும் இந்தியா என இரு தரப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று அமெரிக்க எம்.பி.க்கள் 40-க்கும் அதிகமானோர் கோரிக்கை வைத்தனர். 

இந்த நிலையில் வர்த்தக முன்னுரிமை நாடுகள் பட்டியலில் சேர்வதற்கான தகுதிகளை இந்தியா தற்போது பெற்றுள்ளது என்று வெளியுறவு செயலர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தின்போது, இது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

.