This Article is From Dec 08, 2019

உன்னாவோ வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு அறிவிப்பு!!

உத்தரப்பிரதேசத்தின் மாநில அமைச்சர் சுவாமி பிரசாத் மவுரியா, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அவருடன் அமைச்சர் கமல் ராணி, எம்.பி. சாக்சி மகராஜ் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

உன்னாவோ வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு அறிவிப்பு!!

தீயிட்டு கொளுத்தப்பட்ட பின்னர் பாதிக்கப்பட்ட பெண், டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Unnao:

உன்னாவோ வழக்கில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் வழங்கப்படும் என்று உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது. இந்த வழக்கை விரைந்து விசாரித்து தண்டனை வழங்குவதற்காக விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநில அமைச்சர் சுவாமி பிரசாத் மவுரியா பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அவருடன் அமைச்சர் கமல் ராணி, எம்.பி. சாக்சி மகராஜ் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

இதுகுறித்து அமைச்சர் மவுரியா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

உன்னாவோ வழக்கை விரைந்து விசாரிப்பதற்காக விரைவு நீதிமன்றம் அமைப்பதற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் முடிவு செய்துள்ளார். நீதிக்கு முன்பு குற்றவாளிகள் நிறுத்தப்படுவார்கள். முதல்வர் ரூ. 25 லட்ச ரூபாய் இழப்பீட்டை பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த தொகை முதலமைச்சரின் நிவாரண தொகையில் இருந்து வழங்கப்படும். இதற்கான காசோலை பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாருக்கு அளிக்கப்படுகிறது.

ஒட்டு மொத்த உத்தரப்பிரதேச அரசும், முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாருக்கு துணையாக உள்ளனர். இந்த விவகாரத்தில் நீதி வெகு சீக்கிரத்தில் கிடைக்கும்.

இவ்வாறு மவுரியா தெரிவித்தார்.

‘எந்த மாதிரியான விசாரணை வேண்டும் என உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தார் விரும்புகிறார்களோ, அதனை நாங்கள் செய்து தருவோம். குற்றம் செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாரும் தப்பவில்லை. உன்னாவோவின் பெயர் களங்கம் அடைந்துள்ளது'  என்று அந்த தொகுதியின் பாஜக எம்.பி. சாக்சி மகராஜ் கூறினார்.

உன்னாவோ பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்திற்கு செல்லும்போது 5 பேர் கொண்ட கும்பல் அவரை தீயிட்டு கொளுத்தியது. 90 சதவீத காயங்கள் அடைந்த அவரை, டெல்லி சப்தார் ஜங் மருத்துவமனையில் அதிகாரிகள் அனுமதித்தனர். இருப்பினும் அவர் அங்கு மாரடைப்பால் உயிரிழந்தார்.

அவர் தன்னை 2 பேர் பலாத்காரம் செய்ததாக கடந்த மார்ச் மாதம் புகார் அளித்திருக்கிறார். இதுதொடர்பான வழக்கு உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவே நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

.