This Article is From Jan 28, 2020

கொய்யாப்பழம் வாங்கித் தர மறுத்ததால் 6-ம் வகுப்பு மாணவன் அடித்துக் கொலை!!

6-ம் வகுப்பு மாணவனுக்கும், சக மாணவர்களுக்கும் இடையே கொய்யாப்பழம் வாங்குவது தொடர்பாக ஆரம்பத்தில் வாக்குவாதம் ஏற்பட்டு கடைசியில் சம்பவம் கொலையில் முடிந்திருக்கிறது.

கொய்யாப்பழம் வாங்கித் தர மறுத்ததால் 6-ம் வகுப்பு மாணவன் அடித்துக் கொலை!!

உத்தரப்பிரதேசத்தின் லகிம்பூர் மாவட்டம் ஆமிர் நகர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

Lakhimpur:

கொய்யாப்பழம் வாங்கித் தர மறுத்ததால் அரசுப் பள்ளியில் படிக்கும் 6-ம் வகுப்பு மாணவனை சக மாணவர்கள் 3 பேர் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்பூர் மாவட்டம் ஆமிர் நகர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 6-ம் வகுப்பு மாணவனுக்கும், சக மாணவர்களுக்கும் இடையே கொய்யாப்பழம் வாங்குவது தொடர்பாக ஆரம்பத்தில் வாக்குவாதம் ஏற்பட்டு கடைசியில் சம்பவம் கொலையில் முடிந்திருக்கிறது.

போலீசார் அளித்த தகவலின்படி கொல்லப்பட்ட மாணவரின் பெயர் பர்மான் குரேஷி என்பதாகும். அவருக்கும் சக மாணவர்களுக்கும் இடையே கடந்த சனிக்கிழமை மதியம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

3 மாணவர்கள் குரேஷியிடம் கொய்யாப்பழம் வாங்கி வருமாறு வற்புறுத்தியுள்ளனர். இதனை குரேஷி ஏற்கவில்லை.

இந்த நிலையில் நேற்று குரேஷி தனது உறவினர் தவ்ஹீதுடன் பள்ளிக்கு சென்றபோது, 3 மாணவர்களும் சேர்ந்து கொண்டு குரேஷியை கடுமையாக தாக்கினர். இதில் அவர் உயிரிழந்தார்.

இதன்பின்னர் 3 மாணவர்களும் பள்ளி ஊழியர்களால் பிடிக்கப்பட்டு போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். 

குரேஷியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 302-ன்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து அறிந்ததும், மாவட்ட ஆட்சியர் சைலேந்திர சிங் மற்றும் காவல் துறை அதிகாரி பூனம் ஆகியோர் பள்ளிக்கு சென்று குரேஷியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தனர். 

இருவரும் முதன்மை குற்றவாளியிடம் பேசியுள்ளனர். அப்போது அவர்களிடம், தான் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் குரேஷியை அடிக்கவில்லை என்றும், சாதாரணமாக வயிற்றில் குத்தியதாகவும் குறிப்பிட்டார். 

ஆனால் உறவினர் தவ்ஹீத், 3 மாணவர்கள் சேர்ந்து கொண்டு காட்டுமிராண்டித் தனமாக குரேஷியை தாக்கியதாகவும், பள்ளி ஆசிரியர் முன்பு நடந்த இந்த சம்பவம் நடந்ததாகவும் கூறியுள்ளார். 

மாணவர்கள், நேரில் பார்த்தவர்களின் வாக்கு மூலத்தை அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர். தாக்குதல் நடத்திய 3 மாணவர்களும் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

.