This Article is From Jan 20, 2020

CAA-வை அமல்படுத்தமாட்டோம் என்பது "அரசியலமைப்பிற்கு எதிரானது"; நிர்மலா சீதாராமன்

சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என மாநில அரசுகள் சொல்வது செல்லாது. அவர்கள் சொல்வது சட்டத்திற்கு புறம்பானது. அவர்கள் சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தால் எந்த பாதிப்பும் இல்லை.

CAA-வை அமல்படுத்தமாட்டோம் என்பது

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என்று மாநிலங்கள் கூறுவது "அரசியலமைப்பிற்கு எதிரானது" - நிர்மலா

Chennai:

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக தீர்மானங்களை நிறைவேற்ற மாநிலங்களுக்கு அனுமதி உண்டு, ஆனால் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தலாமா இல்லையா என்பதை அவர்களால் தீர்மானிக்க முடியாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் கூறியதாவது, குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என்று மாநிலங்கள் கூறுவது "அரசியலமைப்பிற்கு எதிரானது" என்று கூறியுள்ளார். 

நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா  நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டது. தொடர்ந்து, குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சட்டத்திற்கு ஆதரவாக அதனை விளக்கி மத்திய அமைச்சர்கள், பல்வேறு கட்சி  தலைவர்கள், பாஜக நிர்வாகிகள் என பல்வேறு தரப்பினர் பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நிர்மலா சீதாராமன் பேசும்போது கூறியதாவது, அசாமில் நடக்கும் தேசிய குடிமக்கள் பதிவேடு, நீதிமன்ற உத்தரவால்நடக்கிறது. அந்த நடைமுறை பிற மாநிலங்களுக்கு பொருந்தாது. குடியுரிமை திருத்த சட்டம் என்பது குடியுரிமை கொடுக்கும் சட்டம். யாருடைய அந்தஸ்தையும் பறிக்கும் சட்டம் அல்ல. 

நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்த போது, எதிர்க்கட்சியினரின் அனைத்து கேள்விகளுக்கும் விரிவாக பதில் அளிக்கப்பட்டது. யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. முறையாக பதிவு செய்தால், அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்

அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் மக்களின் உரிமைகளை பற்றி யாரும் பேசுவது இல்லை. முகாமில் வசிப்போருக்கும் குடியுரிமை வழங்கப்படும். குடியுரிமையை பறிக்க சட்டம் கொண்டு வரவில்லை. 

பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருக்கும் மக்களுக்கு குடியுரிமை வழங்குவதற்காக குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம், 1995ல் இருந்து நடைமுறையில் இருக்கிறது.

சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என மாநில அரசுகள் சொல்வது செல்லாது. அவர்கள் சொல்வது சட்டத்திற்கு புறம்பானது. அவர்கள் சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தால் எந்த பாதிப்பும் இல்லை. குடியுரிமை சட்டம் குறித்து  உண்மைக்கு புறம்பாக பேசி மக்களை கொந்தளிப்புக்கு உள்ளாக்க வேண்டாம், பொறுப்புடன் பேச வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

(With PTI inputs)

.