“பொய் பேசுபவர்களுடன் பேச்சு கிடையாது…”- BJP-ஐ தெறிக்கவிட்ட Uddhav Thackeray!

முன்னதாக தாக்கரே, அதிகாரத்தில் ’50:50’ ஃபார்முலாவை அமல் செய்து, இரண்டரை ஆண்டு காலம் முதல்வர் பதவியைக் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Uddhav Thackeray - “பாஜக, அவர்கள் சொன்னதை ஒப்புக் கொள்ளாத வரை நான் மீண்டும் பேசப் போவதில்லை"

Mumbai:

மகாராஷ்டிராவில் (Maharashtra) பாஜக - சிவசேனா (BJP - Shiv Sena) தலைமையிலான கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரும், அதிகாரப் பகிர்வில் இரு கட்சிகளுக்கும் இடையில் இருந்த முரண் காரணமாக, ஆட்சியமைக்க முடியாத நிலை நீடித்து வருகிறது. இன்று இரவுடன் மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பதற்கான காலக்கெடு முடிவடைகிறது. இந்நிலையில் அம்மாநில முதல்வராக இருந்த பாஜக-வின் தேவேந்திர ஃபட்னாவிஸ் (Devendra Fadnavis), தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில், சிவசேனா கட்சியை கடுமையாக விமர்சித்தார். அந்த விமர்சனங்களுக்கு சிவசேனா, தற்போது பதிலடி கொடுத்துள்ளது.

முன்னதாக ஃபட்னாவிஸ், செய்தியாளர்கள் சந்திப்பின்போது, “கடந்த 15 நாட்களில் சிவசேனாவின் அறிக்கைகள் மற்றும் கருத்துகள்… நாங்கள் எதையும் அவர்களிடத்தில் உறுதியளிக்கவில்லை. சிவசேனாவுக்கு இரண்டரை ஆண்டு கால ஆட்சி கொடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து பேச ஒன்றும் இல்லை. நான் இருக்கும் வரை அது நடக்காது,” என்று உஷ்ணமாக பேசினார். 

மேலும் அவர்,  “உத்தவ் தாக்கரேவுடன் எனக்கு நெருக்கமான உறவு உள்ளது. அவருடன் தனிப்பட்ட முறையில் பேச நானே முயன்றேன். பலமுறை நான் அவருக்கு போன் அழைப்பு விடுத்தும், எதற்கும் பதில் இல்லை. ஆனால், அவர், தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியினருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்,” என்று குற்றம் சாட்டியுள்ளார் ஃபட்னாவிஸ்.

இதற்கு, சிவசேனாவின் தலைவர், உத்தவ் தாக்கரே (Uddhav Thackeray), “ஃபட்னாவிஸ், நான் பொய் சொல்வதாக குற்றம் சாட்டியுள்ளார். நாங்கள் பொய் சொன்னதாக அறியப்பட்டதில்லை. அமித்ஷாவும் ஃபட்னாவிஸும் என்னிடம் வந்தார்கள். நான் அவர்களிடத்தில் செல்லவில்லை,” என்றார்.

முன்னதாக தாக்கரே, அதிகாரத்தில் '50:50' ஃபார்முலாவை அமல் செய்து, இரண்டரை ஆண்டு காலம் முதல்வர் பதவியைக் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்த கோரிக்கைக்கு பாஜக-வும் ஒப்புக் கொண்டதாக அவர் கூறினார். ஆனால், அப்படி ஒப்புக் கொண்டதாக ஃபட்னாவிஸ் தெரிவிக்கவில்லை. 

அற்கு தாக்கரே, “பாஜக, அவர்கள் சொன்னதை ஒப்புக் கொள்ளாத வரை நான் மீண்டும் பேசப் போவதில்லை. என்னை பொய்யர் என்று சொல்பவர்களிடத்தில் நான் பேசப் போவதில்லை,” என்றார்.

மேலும் அவர், “நான் பாஜக-வை ஆட்சியமைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இல்லையென்றால், மற்ற கட்சிகள் உரிமை கோர வாய்ப்பிருக்கிறது. நான் என் தந்தை பால் தாக்கரேவிடம், சிவசேனாவிலிருந்து ஒருவர் முதல்வராக பொறுப்பேற்பார் என்று உறுதியளித்தேன். அதைச் செய்து காட்டுவேன்,” என்றார் தீர்க்கமாக.

இவ்வளவு வார்த்தைப் போர் நடந்த பிறகும், இரு கட்சிகளும் கூட்டணி முறிந்துவிட்டதாக சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இரு கட்சிகளின் இந்த தடாலடி கருத்துகளால், மகாராஷ்டிராவில் அரசியல் குழப்பம் தொடர்ந்து வருகிறது. 

மகாராஷ்டிராவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் இருக்கும் 288 இடங்களில், பாஜக 105 தொகுதிகளைக் கைப்பற்றியது. சிவசேனா, 56 இடங்களைப் பிடித்தது. இருவரும் இந்த இரு கட்சிகளும் கூட்டணி அமைத்தால் சுலபமாக மெஜாரிட்டி கிடைத்துவிடும். சேனாவைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ், 54 தொகுதிகளில் வென்றுள்ளது. காங்கிரஸ் 44 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. 


 

More News