This Article is From May 25, 2020

பயணிகளின் விமான சேவையை மறுக்கும் மகாராஷ்டிரா! ஊரடங்கை நீட்டிக்கத் திட்டம்!!

"நான் விமானப் போக்குவரத்து அமைச்சரிடம் (ஹர்தீப் சிங் பூரி) பேசினேன். விமானப் பயணம் தொடங்கப்படுவதன் அவசியத்தை நான் புரிந்துகொள்கிறேன், ஆனால் அதற்கான தயாரிப்பு பணிகளுக்கு கால அவகாசம் தேவை" என்று உத்தவ் தாக்கரே மாநில மக்களுக்கு உரையாற்றியபோது கூறியுள்ளார்.

உத்தவ் தாக்ரே இன்று மத்தியம் செய்தியாளர்களை சந்தித்தார்

Mumbai/ New Delhi:

தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1,31,868 ஆக அதிகரித்துள்ள நிலையில் மத்திய அரசு உள்நாட்டு விமான போக்குவரத்திற்கு அனுமதியளித்தது. ஆனால், சில மாநில அரசுகள் இதற்கு ஆட்சேபனை தெரிவித்தன. இந்நிலையில் மகாராஷ்டிராவில் இம்மாத இறுதிவரை பயணிகளுக்கான விமான சேவையை அனுமதிக்க முடியாது என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே தெரிவித்துள்ளார். மேலும், இந்த போக்குவரத்தினை தொடங்குவதற்கு தங்களுக்கு கால அவகாசம் தேவைப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மகாராஷ்டிராவில் இதுவரை 47,190 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

"நான் விமானப் போக்குவரத்து அமைச்சரிடம் (ஹர்தீப் சிங் பூரி) பேசினேன். விமானப் பயணம் தொடங்கப்படுவதன் அவசியத்தை நான் புரிந்துகொள்கிறேன், ஆனால் அதற்கான தயாரிப்பு பணிகளுக்கு கால அவகாசம் தேவை" என்று உத்தவ் தாக்கரே மாநில மக்களுக்கு உரையாற்றியபோது கூறியுள்ளார். தற்போதைய நிலையில் வெளி நாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்டு வருவதற்கான சிறப்பு விமானங்கள் மற்றும் மருத்துவ தேவைக்கான விமானங்கள் மட்டும் இயக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

“இனி வரக்கூடிய நாட்களில் நாம் கவனமாக இருக்க வேண்டும். இந்தக் காலங்களில் அதிக அளவில் பாதிக்கப்பட்டவர்களை நாம் புதியதாக அடையாளம் காண நேரிடும். மே இறுதியோடு ஊரடங்கு தளர்த்தப்படும் என எதிர்பார்க்க முடியாது.“ என தாக்ரே குறிப்பிட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் தவிர மேற்கு வங்கத்தில் கொல்கத்தா மற்றும் சென்னை விமான நிலையங்கள் மீண்டும் இயங்குவதற்கு காலக்கெடுவினை கோரியுள்ளது. ஆம்பன் புயல் சேதம் காரணமாக மேற்கு வங்கம் தற்போது விமான போக்குவரத்தினை இயக்க மறுத்துள்ளது. நாட்டில் இரண்டாவது மாநிலமாக கொரோன தொற்றால் அதிக எண்ணிக்கை கொண்ட தமிழகம் விமான போக்குவரத்தினை இம்மாத இறுதி வரை அனுமதிக்கக்கூடாது என கோரியுள்ளது.

மகாராஷ்டிராவை பொறுத்த அளவில் “நாங்கள் முதலில் தொற்றை கட்டுப்படுத்த முயன்றுக்கொண்டிருக்கின்றோம். பின்னர் பொருளாதார நடவடிக்கைகளை அனுமதிப்போம்.“ என அம்மாநில முதல்வர் தாக்ரே கூறியுள்ளார்.

.