சபரிமலை கோயிலுக்குள் நுழைந்த 2 பெண்கள்... திடீரென மூடப்பட்ட சன்னிதானம்!

சபரிமலையில் ஏறும்போது, 2 பெண்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது

40 வயதை ஒட்டியுள்ள அந்த இரண்டுப் பெண்களும் இன்று அதிகாலை கோயிலுக்குள் சென்றனர் என்று போலீஸ் தரப்பு தகவல் கூறுகிறது

ஹைலைட்ஸ்

  • போலீஸ் பாதுகாப்புடன் 2 பெண்களும் சென்றுள்ளனர்
  • இன்று அதிகாலை பெண்கள் கோயிலுக்குள் தரிசனம் செய்துள்ளனர்
  • கேரள முதல்வர் பினராயி விஜயனும் இதை உறுதி செய்துள்ளார்
Thiruvananthapuram:

சபரிமலையில் இருக்கும் ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்ததை அடுத்து, முதன்முறையாக 2 பெண்கள் இன்று கோயிலுக்குள் சென்றுள்ளனர். இதையடுத்து, கோயிலை புனிதப்படுத்த மூடப்பட்டுள்ளது.

40 வயதை ஒட்டியுள்ள பிந்து மற்றும் கனகா ஆகிய இருவர்தான் இன்று அதிகாலை கோயிலுக்குள் சென்றனர் என்று போலீஸ் தரப்பு தகவல் கூறுகிறது. நேற்று நள்ளிரவு இரண்டு பெண்களும் மலை அடிவாரத்திலிருந்து புறப்பட்டார்கள் என்றும் இன்று அதிகாலை 3:45 மணிக்கு கோயிலுக்குள் சென்று, ஐயப்பனை அவர்கள் தரிசித்தார்கள் என்றும் கூறப்படுகிறது. 

சபரிமலையில் ஏறும்போது, 2 பெண்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. கடந்த டிசம்பர் மாதமும் இந்த இரண்டு பெண்கள் கோயிலுக்குள் செல்ல முயன்றனர் என்றும், போராட்டக்காரர்களால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன், 'இன்று அதிகாலை இரண்டு பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்தார்கள் என்பது உண்மைதான். கோயிலுக்கு வரும் அனைவருக்கும் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்படும்' என்று தகவல் தெரிவித்துள்ளார். 

ஐயப்ப தர்ம சேனா தலைவர் ராகுல் ஈஷ்வரோ, 'இரண்டு பெண்கள் கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்துள்ளார்கள் என்பதில் உண்மை இருப்பதாக தெரியவில்லை. எங்களுக்குத் தெரியாமல் சீக்ரெட்டாக இது நடந்திருக்கலாம். உண்மை தெரியவந்த பின்னர் இது குறித்து நாங்கள் நடவடிக்கை எடுப்போம்' என்று கருத்து கூறியுள்ளார். 

44 வயதாகும் பிந்து, சிபிஐ (எம்எல்) அமைப்பைச் சேர்ந்த கல்லூரி ஆசிரியர் என்றும், 42 வயதாகும் கனகதூர்கா சிவில் சப்ளையின் ஊழியர் என்றும் பிடிஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.