This Article is From Jul 12, 2019

50 பெட்டி தண்ணீருடன் சென்னைக்குப் புறப்பட்ட ரயில்; தாகம் தீர்க்குமா ‘ஜோலார்பேட்டை திட்டம்’!

சென்னைக்குத் தேவைப்படுவதோ, ஒரு நாளைக்கு 830 மில்லயன் லிட்டர் தண்ணீர்.

“தற்போது எடுத்துச் செல்லப்படும் நீர் அளவை விட, அதிக நீர் சீக்கிரமே எடுத்துச் செல்லப்படும்,” என்று ரயில்வே துறை அதிகாரி ஒருவர் நம்மிடம் தகவல் தெரிவிக்கிறார். 

ஹைலைட்ஸ்

  • ஒரு டிரிப் மூலம் 2.5 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு வரப்படும்
  • ஒரு நாளைக்கு 10 மல்லியன் லிட்டத் தண்ணீர் கொண்டு வர இலக்கு
  • இந்தத் திட்டத்திற்கு தமிழக அரசு, ரூ.65 கோடி ஒதுக்கியுள்ளது
Chennai:

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து, 50 பெட்டிகளில் 2.5 மில்லியன் லிட்டர் தண்ணீருடன் சென்னைக்குப் புறப்பட்டது, சிறப்பு ரயில். இந்த தண்ணீர் மூலம், சென்னையில் நீர் தட்டுப்பாட்டைப் போக்க தமிழக அரசு முயன்றுள்ளது. சென்னை மெட்ரோ வாட்டர் அமைப்பு, இந்த சிறப்புத் திட்டம் மூலம் ஒரு நாளைக்கு 10 மில்லியன் லிட்டர் தண்ணீரைக் கொண்டு வர இலக்கு வைத்துள்ளது. 

“தற்போது எடுத்துச் செல்லப்படும் நீர் அளவை விட, அதிக நீர் சீக்கிரமே எடுத்துச் செல்லப்படும்,” என்று ரயில்வே துறை அதிகாரி ஒருவர் நம்மிடம் தகவல் தெரிவிக்கிறார். 

ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு முதன்முறையாக வரும் ரயில் நீரை, வாங்குவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல் ரயில் வரும்போது, அதை வரவேற்பதற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் வர உள்ளார். இந்த நிகழ்ச்சி வில்லிவாக்கம் ரயில் நிலையத்தில் நடக்க உள்ளது. 

ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு ஒரு முறை தண்ணீர் கொண்டு வருவதற்கு தெற்கு ரயில்வே, சென்னை மெட்ரோ வாட்டர் அமைப்பிடம் 7.5 லட்சம் ரூபாய் பெற உள்ளது. இந்தத் திட்டத்திற்கு தமிழக அரசு 65 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. 

சென்னை, வில்லிவாக்கத்திலிருந்து ஜோலார்பேட்டை 220 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதற்குப் பயண நேரமாக ரயில், 5 மணி நேரம் எடுத்துக் கொள்ளும் என்று தெரிகிறது. வில்லிவாக்கம் வரும் நீர், கீழ்ப்பாக்கத்திற்கு குழாய் மூலம் அனுப்பப்படும். அங்கிருந்து நீர் சென்னையின் பல்வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட இருக்கிறது. 

ஜோலார்பேட்டையிலிருந்து இப்படி தண்ணீர் வருவதால், சென்னையின் குடிநீர்ப் பிரச்னை முழுவதுமாக தீர்ந்துவிடும் என்று சொல்வதற்கில்லை. இதன் மூலம், நகரத்துக்கு ஒரு நாளைக்கு 525 மில்லியன் லிட்டர் சப்ளை என்ற குறைந்தபட்ச இலக்கைத்தான் அரசு அடையும். ஆனால், சென்னைக்குத் தேவைப்படுவதோ, ஒரு நாளைக்கு 830 மில்லயன் லிட்டர் தண்ணீர்.

ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்திலிருந்து 3.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு குழாய் பதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள நீர் மையத்திலிருந்துதான், தண்ணீர் பம்ப் செய்யப்பட்டு ரயிலில் நிரப்பப்படுகிறது. இந்த குழாய் வழியாக, தண்ணீர் சரியாக வருகிறதா என்பதை கடந்த புதன் கிழமை சோதனை செய்து பார்த்தது அரசு. 

தற்போது சென்னையில் நிலவி வரும் தண்ணீர்ப் பிரச்னைக்குப் பருவமழை பொய்த்ததைக் காரணமாக சொல்கிறது அரசு. இதனால் சென்னைக்குத் தேவையான நீரில் 40 சதவிகிதத்தை, அரசு குறைத்துள்ளது. 

நகர மக்களின் துயர் துடைக்க, 900 டாங்கர் லாரிகள் மூலம் தினமும் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்த லாரிகள் மூலம் குடும்பம் ஒன்றுக்கு 5 குடுங்கள் நீர் மட்டுமே கிடைப்பதாக மக்கள் பலர் குற்றம் சாட்டுகின்றனர். தனியார் லாரி உரிமையாளர்கள், தண்ணீர் சப்ளைக்கான கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தியுள்ளனர். தண்ணீர்ப் பிரச்னையை சரியாக சமாளிக்கவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம், சமீபத்தில் தமிழக அரசுக்குக் கண்டனம் தெரிவித்தது.

வரும் 2021 ஆம் ஆண்டுக்குள், இந்தியாவில் உள்ள 21 நகரங்களில் தண்ணீர் சுத்தமாக இருக்காது என்று கணித்துள்ளது நிதி அயோக். சென்னை நகரமும் அதில் ஒன்று.

.