This Article is From Jul 13, 2019

“நொந்துட்டோம்…”- கோவாவில் காங்கிரஸிலிருந்து தாவிய எம்.எல்.ஏ-க்களால் கடுப்பான பாஜக தொண்டர்கள்!

தற்போது பாஜக-வில் இணைந்துள்ள 15 பேரில் 10 பேர் கிறித்துவர்கள்.

காங்கிரஸ் தொண்டர்களும், அரங்கேறி வரும் அரசியல் நாடகங்களால் மனமுடைந்து போயுள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • இந்த வாரத் தொடக்கத்தில் 10 காங் எம்எல்ஏ-க்கள், பாஜக-வுக்கு தாவினர்
  • பல பாஜக தொண்டர்கள், இந்த கட்சித் தாவலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்
  • காங்கிரஸ் தொண்டர்களும் இந்த விஷயத்தால் டென்ஷனில்தான் உள்ளனர்
Panaji:

கோவா மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த 10 பேர், இந்த வாரத் தொடக்கத்தில் பாஜக-வுக்குத் தாவினர். இதில் 3 பேருக்கு இன்று அமைச்சர் பதவி கொடுக்கப்பட உள்ளது. இந்த செயலால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் மட்டுமல்ல, பாஜக தொண்டர்களும் உஷ்ணத்தில்தான் உள்ளனர். 

“எனக்கு இந்த கட்சித் தாவலில் கொஞ்சமும் ஈடுபாடு இல்லை. சில அற்ப ஆசைக்காக காங்கிரஸிலிருந்து எம்.எல்.ஏ-க்கள் பாஜக-வுக்கு அணி மாறியுள்ளனர்” என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த சுமாந்த் ஜோக்லேகர் கொதிக்கிறார். ஜோக்லேக்கரின் தந்தை, கோவாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு உருவாகக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர் ஆவார். கோவாவில் பாஜக வளர அதிகம் உழைத்தவர் ஜோக்லேகர்.

அவர் மேலும், “எங்களுக்கு மேல் இருப்பவர்கள் மக்களை சந்திக்க வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால், நாங்கள் நேரடியாக மக்களிடத்தில் பணி செய்கிறோம். அவர்களிடம் நான் எப்படி போய் ஓட்டு கேட்பது. பாஜக-வின் இந்த யுக்தியால் நான் அதிக காயமடைந்துள்ளேன்” என்று ஆதங்கப்படுகிறார். 

நடந்து முடிந்த தேர்தலில் பாஜக-வுக்கு வாக்களித்த மூத்த பத்திரிகையாளர் அரவிந்த் தெங்ஸே, “பாஜக-வில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்தது கொஞ்சம் கூட ஏற்புடுடையது அல்ல. குறிப்பாக பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள பாபுஷ் மோன்சரட்டே இணைக்கப்பட்டது தவறு. பாஜக-வுக்கு பெண்கள் ஆதரவு கொடுத்து வந்தனர். இனி எப்படி அவர்களின் ஆதரவு கிடைக்கும்” என்றார் வருத்தத்துடன்.
 

sojran0o

காங்கிரஸ் தொண்டர்களும், அரங்கேறி வரும் அரசியல் நாடகங்களால் மனமுடைந்து போயுள்ளனர். “கட்சி மாறியவர்கள் அடுத்த முறை தேர்தலில் நின்று வெற்றி பெற முடியாது. இது மிகவும் தவறானது” என்கிறார் காங்கிரஸ் தொண்டரான ஃப்ளோரியானோ கொலாகோ.

சில மாதங்களுக்கு முன்னர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றவர்கள், எப்படி திடீரென்று பாஜக உறுப்பினராக பதவியேற்க முடியும் என்கிற கேள்வி கோவாவில் பொதுப்படையாக இருப்பவர்களுக்கும் எழுந்துள்ளது. இதை ஒத்த ஓர் கருத்தை மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கரின் மகன், உத்பால் பாரிக்காரும் சொல்லியிருக்கிறார். அவர், “என் தந்தை பயணித்த அரசியல் பாதை அல்ல இது. கடந்த 30 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்து வரும் தொண்டர்களை நினைத்து நான் அதிக கவலைப்படுகிறேன்” என்று தனது கருத்தை கொட்டித் தீர்த்துள்ளார். 

தற்போது பாஜக-வில் இணைந்துள்ள 15 பேரில் 10 பேர் கிறித்துவர்கள். இதனால் பாஜக, கிறித்துவர்கள் மத்தியில் பிரபலமடையும் என்று அந்தக் கட்சி கணக்குப் போடுகிறது. 

அதை மறுக்கும் கோவா காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர், சித்தாநாத் புயாவ்,  “தற்போது பாஜக பக்கம் சாய்ந்துள்ளவர்கள், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டதால்தான் வெற்றி பெற்றனர். அவர்களுக்கென்று தனிப்பட்ட செல்வாக்கெல்லாம் இல்லை.” என்று விளக்குகிறார். 

.