குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து நாளை திமுக போராட்டம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

அதிமுக எதிர்த்து வாக்களித்திருந்தால் குடியுரிமை சட்ட திருத்தம் மாநிலங்களவையில் தோற்கடிக்கப்பட்டிருக்கும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து நாளை திமுக போராட்டம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழகத்தில் திமுக சார்பில் நாளை போராட்டத்திற்கு அழைப்பு

குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் திமுக போராட்டம் நடத்தும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். 

குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. முக்கியமாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அசாம் மற்றும் திரிபுராவில் முதலில் போராட்டம் வெடித்த நிலையில், தற்போது நாடு முழுவதும் போராட்டம் தொடங்கியுள்ளது. 

முன்னதாக நேற்று புதிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது டெல்லி போலீசார் அத்துமீறி நடத்திய தாக்குதலை கண்டித்து நாடு முழுவதும் கல்லூரி மாணவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனிடையே, மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில், குடியுரிமை திருத்த மசோதாவைக் கண்டித்து முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது. 

இந்நிலையில், குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து தமிழகத்தில் திமுக சார்பில் நாளை போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய பாஜக அரசின் கொடுங்கோன்மை சட்டத்தை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்துவோம் என்றும், பாஜக அரசின் சட்டத்துக்கு துணை போன அதிமுக அரசை உள்ளாட்சி தேர்தலில் முறியடித்து பாடம் கற்பிப்போம் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

குடியுரிமை சட்ட திருத்தத்தின் மூலம் மத ரீதியாக நாட்டை கூறுபோடுவதாக மத்திய பாஜக அரசு மீது ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். பல்வேறு பிரச்சனையால் ஏற்பட்டுள்ள கோபத்தை திருப்பவே பாரபட்சமான சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

குடியுரிமை சட்டத்தை திருத்த அவசர தேவை உள்ளதா என்பது தான் நாம் எழுப்பும் கேள்வி என்று தெரிவித்துள்ள ஸ்டாலின், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தை சேர்ந்த முஸ்லீம்கள் தவிர மற்றவர்கள் இந்தியாவுக்கு வரலாம் என்று சட்டம் திருத்தப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவில் பல ஆண்டுகளாக வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க புதிய சட்ட திருத்தம் மறுக்கிறது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாநிலங்களவை அதிமுக உறுப்பினர்கள் இந்த விபரீத சட்டம் நிறைவேற ஆதரவு அளித்ததை ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அதிமுக எதிர்த்து வாக்களித்திருந்தால் குடியுரிமை சட்ட திருத்தம் மாநிலங்களவையில் தோற்கடிக்கப்பட்டிருக்கும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

More News