This Article is From Jan 29, 2020

குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்பட வாய்ப்பு? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!

இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ள கருப்பு ஆடுகள் எங்கே இருந்தாலும், எவ்வளவு பெரிய புள்ளியாக இருந்தாலும் பாரபட்சம் கிடையாது. 

குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்பட வாய்ப்பு? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!

தவறு செய்தவர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் - ஜெயக்குமார்

குரூப்-4 தேர்வு முறைகேடுகள் குறித்து நடந்த ஆலோசனைக்கு பின்னர் தேர்வு ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளதா? என்பது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த செப்டம்பர் மாதம் நடத்திய குரூப்-4 எழுத்துத்தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி, இடைத்தரகர்களையும், முறைகேட்டில் ஈடுபட்டவர்களையும் கைது செய்து வருகின்றனர். 

இந்நிலையில் சென்னையில் தலைமைச் செயலகத்தில் இந்த விவகாரம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது, ஒரு சில தேர்வு மையங்களில் இதுபோன்ற முறைகேடு நடைபெறுவது ஏற்றுக்கொள்ள முடியாத செயலாக உள்ளது. 

அதை வைத்து நாம் ஒட்டுமொத்தமாக தேர்வாணையத்தின் நம்பகத்தன்மையை சந்தேகிக்கக் கூடாது. சிபிசிஐடி சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ள கருப்பு ஆடுகள் எங்கே இருந்தாலும், எவ்வளவு பெரிய புள்ளியாக இருந்தாலும் பாரபட்சம் கிடையாது. 

குற்றம் செய்தால் சிறு புள்ளியாக இருந்தாலும் சரி, கரும்புலியாக இருந்தாலும் சரி, பெரும் புலியாக இருந்தாலும் சரி அது களை எடுக்கப்படும். தண்டனை கொடுக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு எல்லாவிதமான நடவடிக்கையையும் எடுப்போம். 

ஒரு சிலர் செய்த தவறுக்காக தேர்வர்கள் அனைவரையும் தண்டிக்க முடியாதல்லவா!, நியாயமாக தேர்வெழுதி வெற்றி பெற்றவர்கள் பாதிக்கப்பட மாட்டார்களா? இரு மையங்களில் நடந்த முறைகேட்டிற்காக மீண்டும் தேர்வு நடத்துவது நியாயமில்லை. 

ஒட்டுமொத்தமாக தேர்வு எழுதிய இளைஞர்களும் தங்கள் எதிர்காலம் குறித்து பயப்பட தேவை இல்லை, அச்சம் கொள்ளத் தேவையில்லை. தவறு செய்தவர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வு ரத்து குறித்து தேர்வாணையம் முடிவு செய்யும் என்று அவர் கூறினார்.
 

.