“காலில் விழுவீங்களா..?” எனக் கேட்ட செல்லூர் ராஜூ!- கோரஸாக பதில் சொன்ன அதிமுக வேட்பாளர்கள்!!

TN Local Body Elections - தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் வரும் டிசம்பர் 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளன.

“காலில் விழுவீங்களா..?” எனக் கேட்ட செல்லூர் ராஜூ!- கோரஸாக பதில் சொன்ன அதிமுக வேட்பாளர்கள்!!

TN Local Body Elections - தேர்தல் முடிவுகள் 2020 ஜனவரி 2-ம் தேதி அறிவிக்கப்படுகின்றன.

TN Local Body Elections - தமிழகத்தில் இன்னும் ஒரு சில நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளன. பல இடங்களில் ஊராட்சித் தேர்தலுக்கு ஏலம்விடும் சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் மதுரை மாவட்டம், மேலூரில் அதிமுகவின் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ (Sellur Raju) கலந்து கொண்டு, மக்களிடம் எப்படி வாக்கு சேகரிப்பது என்பது குறித்து ஆலோசனை வழங்கினார். 

அதிமுக வேட்பாளர்கள் மத்தியில் பேசத் தொடங்கிய செல்லூர் ராஜு, “உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை, நீங்கள் அரசியல் பேசக் கூடாது. எதிர்க்கட்சிகளைப் பற்றி குறை சொல்லக் கூடாது. உங்களால் என்ன செய்ய முடியும் என்பது குறித்து மட்டும் பிரசாரம் செய்ய வேண்டும். வீடு வீடாக சென்று வாக்காளர்களைச் சந்திக்க வேண்டும். அம்மா ஓட்டு போடுங்க, மாமா ஓட்டு போடுங்க, தங்கச்சி ஓட்டு போடுங்க, ஐயா ஓட்டு போடுங்க என்று சகஜமாக பேச வேண்டும். நாங்கள்தான் ஆளுங்கட்சியினர். எங்களால்தான் உங்களுக்கு வேண்டியதைச் செய்து கொடுக்க முடியும் என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும்,” என்றார்.

ஒரு கட்டத்தில் செல்லூர் ராஜூ, “வாக்காளர்கள் காலில் விழுந்து வாக்கு சேகரிக்க வேண்டும். விழுவீர்களா..?” என்று கேட்டார். அதற்கு எல்லோரும், “விழுவோம்…” என்று கோரஸாக பதில் அளித்தனர். 

தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் வரும் டிசம்பர் 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் 2020 ஜனவரி 2-ம் தேதி அறிவிக்கப்படுகின்றன.

தேர்தல் நடைபெறவுள்ள 27 மாவட்டங்களில், 76 ஆயிரத்து 746 ஊராட்சி வார்டு உறுப்பினர், 9,624 ஊராட்சி தலைவர்கள், 5,090 ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் நிரப்பப்படவுள்ளன. மீதமுள்ள 9 மாவட்டங்களுக்கு வார்டு மறுவரையறை செய்து முடித்த பின்னர் தேர்தல் நடைபெறும் என்று தெரிகிறது.