This Article is From Nov 16, 2018

‘நிவாரண முகாம்களில் 82,000 பேர்!’- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

திண்டுக்கல்லில் மையம் கொண்டுள்ள கஜா புயல் 23 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. அடுத்த 6 மணி நேரத்தில் புயல், ஆழ்ந்த காற்றுழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும்

‘நிவாரண முகாம்களில் 82,000 பேர்!’- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

வங்கக்கடலில் உருவான ‘கஜா' புயல் கரையைக் கடந்துள்ளது. தற்போது புயல் திண்டுக்கல்லில் மையம் கொண்டுள்ளது. நள்ளிரவு 12 மணிக்கு மேல், கஜா புயல் நாகை - வேதாரண்யத்திற்கு இடையே கரையைக் கடந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று கன மழை பெய்து வருகிறது

புயல் எதிரொலியை அடுத்த தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. நாகை, திருவாரூர், கடலூர், தஞ்சை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து சென்னை, சேப்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ‘இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஊடகங்கள் உரிய நேரத்தில் மக்களுக்குத் தகவலை சேர்த்திருக்கிறார்கள். சில மாவட்டங்களில் மின்சாரத் துண்டிப்பு ஏற்பட்டிருந்தாலும் போர்க்கால அடிப்படையிலேயே மின்சார சீரமைப்புப் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. இது குறித்து மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணியுடன் பேசியுள்ளேன்.

மிக விரைவாக மக்களை சகஜ நிலைக்குக் கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்து வசதிகளும் பழைய நிலைமைக்குத் திரும்பி வருகின்றன. உயிரிழப்பே இருக்கக் கூடாது என்ற நோக்கில் தான் பணிகளைச் செய்தோம். அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர் மக்கள். 6 மாவட்டங்களில் 82,000 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 471 முகாம்கள் மாநிலம் முழுவது அமைக்கப்பட்டு உள்ளன. சேதங்களைக் கணக்கிட்டு பாதிப்புகளுக்கு நிவாரணம் கொடுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்' என்று கூறியுள்ளார்.

தற்போது வானிலை மையம் வெளியிட்ட தகவல்படி, ‘காலை 6 மணிக்கு கஜா புயல் முழுவதுமாக கரையைக் கடந்தது. திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிரப்பிட்டி ஆகிய இடங்களில் அதிகபட்சமாக 17 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

மேலும், திருச்சி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும். திண்டுக்கல்லில் மையம் கொண்டுள்ள கஜா புயல் 23 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. அடுத்த 6 மணி நேரத்தில் புயல், ஆழ்ந்த காற்றுழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும்' என்று தெரிய வந்துள்ளது.

.