This Article is From Nov 30, 2018

‘நிர்வாணமாக நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவோம்..!’- எச்சரிக்கும் தமிழக விவசாயிகள்

விவசாயக் கடன் தள்ளுபடி, விளை பொருட்களுக்கு சரியான விலை உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து, தலைநகர் டெல்லியில் ஏராளமான விவசாயிகள் 2 நாட்களுக்கு போராட்டம் நடத்த உள்ளனர்

‘நிர்வாணமாக நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவோம்..!’- எச்சரிக்கும் தமிழக விவசாயிகள்

விவசாயக் கடன் தள்ளுபடி, விளை பொருட்களுக்கு சரியான விலை உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து, தலைநகர் டெல்லியில் ஏராளமான விவசாயிகள் 2 நாட்களுக்கு போராட்டம் நடத்த உள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளும், மற்ற மாநில விவசாயிகளுடன் இன்று கை கோர்த்துள்ளனர். இந்நிலையில், ‘நாடாளுமன்றத்திற்குள் எங்களை விடவில்லை என்றால், நாங்கள் நிர்வாணமாக போராட்டம் நடத்துவோம்' என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இடதுசாரி அமைப்புகள் மற்றும் பல்வேறு விவசாய சங்கங்கள் மூலம் குவிந்திருக்கும் ஆயிரக்கணக்கான விவசாயிகள், டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தை முற்றுகையிட திட்டமிட்டுள்ளனர். இதையொட்டி, 3500 போலீஸ் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

இன்னும் ஒரு சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், விவசாயிகள் இந்தப் போராட்டம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த 1200 விவசாயிகளும் போராட்டத்தில் கலந்து கொள்ள, டெல்லிக்கு நேற்று வந்துள்ளனர். அவர்கள், உயிரிழந்த 2 விவசாயிகளின் மண்டை ஓடுகளையும் கையில் வைத்துள்ளனர். இன்று நாடாளுமன்றத்திற்கு உள்ளே விவசாயிகள் அனுமதிக்கப்படவில்லை என்றால், நிர்வாணமாக போராட்டத்தில் கலந்து கொள்ளப் போவதாக அச்சுறுத்துகின்றனர்.

இது குறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு பேசுகையில், ‘நாங்கள் விளைவிக்கும் பொருட்களுக்கான ஆதார விலையைத் தான் கேட்கிறோம். இது குறித்து மத்திய அரசு இன்று சரியான நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அப்படி அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தமிழக விவசாயிகளான நாங்கள் நிர்வாணமாக போராடத் தயாராக உள்ளோம்' என்று கொதிக்கிறார்.

டெல்லியில் நடக்கும் போராட்டத்தில் கலந்து கொள்ள விவசாயிகள் மத்திய பிரதேசம், ஆந்திரா, தமிழ்நாடு, உத்தர பிரதேசம், குஜராத், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து ரயில் மூலமாகவும், ட்ராக்டர் மூலமாகவும் டெல்லிக்கு வந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தலைநகரில் திரண்டுள்ளதால், டெல்லியே பதற்றமான சூழலில் இருக்கிறது.

.