This Article is From Nov 20, 2018

‘எதிர்கட்சிகளுக்கு பக்குவம் போதவில்லை!’- கஜா நிவாரணப்பணி குறித்த விமர்சனத்துக்கு முதல்வர்

தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டு வருகிறார்

‘எதிர்கட்சிகளுக்கு பக்குவம் போதவில்லை!’- கஜா நிவாரணப்பணி குறித்த விமர்சனத்துக்கு முதல்வர்

தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டு வருகிறார். தற்போது தஞ்சையில் அவர் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து வருகிறார்.

சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி சென்ற முதலமைச்சர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகையில் புயல் சேத பகுதிகளை பார்வையிடுகிறார்.

தமிழகத்தின் நாகை, கடலூர், திருவாரூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களை கடந்த 16-ம் தேதி கஜா புயல் கடுமையாக தாக்கியது. இதில் சுமார் 1.7 லட்சம் மரங்கள் அடியோடு சாய்ந்துள்ளன. ஒரு லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்துள்ளன.

புயலில் சிக்கி 45 பேர் உயிரிழந்திருக்கின்றனர். அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 25 ஆயிரம் இழப்பீடும் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி இன்று பலருக்கு நிவாரணத் தொகையை நேரில் சென்று வழங்கினார்.

இதைத் தொடர்ந்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் பழனிசாமி, ‘கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அது குறித்து எடுத்துக் கூறி நிவாரணம் பெற பிரதமர் மோடியை விரைவில் சந்திப்பேன்.

பல கிராமங்களில் மின் கம்பங்கள் மற்றும் மின் நிலையங்கள் சேதமடைந்துள்ளதால் மின்சார சேவை வழங்குவதில் சிக்கல் இருக்கிறது. அது குறித்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 5 நாட்களில் சேதங்கள் சீரமைக்கப்பட்டு, மீண்டும் மின்சாரம் வழங்கப்படும்.

கேரள மாநிலத்தில் சமீபத்தில் பெரு மழை கொட்டிய போது, அங்கு அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து, எதிர்கட்சிகள் விமர்சனம் செய்யவில்லை. அங்கு எதிர்கட்சிகள் பக்குவத்துடன் நடந்து கொண்டன. தமிழகத்தில் இருக்கும் எதிர்கட்சிகளுக்கு பக்குவம் போதவில்லை' என்று கூறினார்.

மேலும் படிக்க - "முதலமைச்சர்க்குள்ளும் ஒரு நீரோ இருக்கிறான்!'- வீடியோ வெளியிட்டு கண்டித்த மு.க.ஸ்டாலின்"

.