This Article is From Jun 06, 2019

தமிழகத்தில் தேர்தல் தோல்வி குறித்து பாஜகவினர் ஆலோசனை!

தமிழகத்தில் தேர்தல் தோல்வி குறித்து பாஜகவினர் சென்னையில் இன்று ஆலோசனை மேற்கொண்டனர்.

தமிழகத்தில் தேர்தல் தோல்வி குறித்து பாஜகவினர் ஆலோசனை!

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தம் இருக்கும் 542 இடங்களில் 352 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைத்தது.

இதில், தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி 38 தொகுதிகளிலும், அதிமுக 1 தொகுதியிலும் வெற்றி பெற்றது. இதில், அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக 5 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில், கன்னியாகுமரி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணனும், தூத்துக்குடி தொகுதியில் தமிழிசை சவுந்தரராஜனும், இராமநாதபுரத்தில் நயினார் நாகேந்திரனும், கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணணும், சிவகங்கை தொகுதியில் எச்.ராஜாவும் போட்டியிட்டனர். எனினும், போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் பாஜக அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வியை சந்தித்தது.

தனிப்பெரும்பான்மை பெற்ற பாஜகவால், தமிழகத்தில் ஒரு தொகுதியை கூட கைப்பற்ற முடியாதது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, பாஜக போட்டியிட்ட, ஐந்து மக்களவைத் தொகுதிகளில், ராமநாதபுரம், கோவை ஆகிய தொகுதிகளில், குறைந்த வித்தியாசத்தில் தான் தோல்வி ஏற்பட்டுள்ளது.

அதேநேரத்தில், அதிமுக வேட்பாளர்கள், மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து உள்ளனர். எனவே, இந்த தோல்வி, பாஜகவுக்கு எதிரான அலை அல்ல… அதிமுகவுக்கு எதிரான அலையாகத் தான் அமைந்துள்ளது என பாஜக தரப்பில் பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் தேர்தல் தோல்வி குறித்து சென்னை கமலாலயத்தில் வைத்து பாஜக தமிழக பொறுப்பாளர் முரளிதர ராவ் தலைமையில் தற்போது ஆய்வு கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தில் பாஜகவின் மாநில மையக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும், தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

.